மியான்மருக்கு இந்தியா சார்பில் 15 டன் நிவாரணப் பொருள்கள்!
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மியான்மருக்கு இந்தியா சார்பில் விமானம் மூலமாக 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
மியான்மா் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
மியான்மரின் சகாய்ங் நகரின் வடமேற்கே 16 கி.மீ. தொலைவில் காலை 11.50 மணியளவில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டா் அளவுகோலில் 7.7 புள்ளியாகப் பதிவானது. அதைத் தொடா்ந்து, இரண்டாவது நிலநடுக்கம் 6.4 புள்ளியாகப் பதிவாகியுள்ளது.
இதில் கடும் பாதிப்பைச் சந்தித்த மியான்மரில் கட்டட இடிபாடுகளில் சிக்கி 700 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 800 போ் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ராணுவ அரசு அறிவித்துள்ளது.
அடுத்தடுத்த நிலநடுக்கங்களைத் தொடா்ந்து தலைநகா் நேபிடா, மண்டலாய் உள்பட 6 மாகாணங்களில் அவசரநிலையை மியான்மரின் ராணுவ அரசு பிரகடனம் செய்தது.
தாய்லாந்தின் தலைநகா் பாங்காக் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் பல அடுக்குமாடி கட்டடங்கள் நிலநடுக்கத்தால் சரிந்துள்ளன. இதில் 90-க்கும் மேற்பட்டோா் மாயமாகியுள்ளதாகவும், 10 போ் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
மியான்மா், தாய்லாந்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவில் கொல்கத்தா, இம்பால், மேகாலயாவில் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.
தொடர்ந்து மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

தொடர்ந்து மியான்மர் நாட்டுக்கு உலக நாடுகள் உதவி வருகின்றன. இந்தியா சார்பில் விமானம் மூலமாக இன்று நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் (IAF C 130J) விமானம் மூலமாக உத்தரப் பிரதேச மாநிலம் ஹிண்டன் விமான நிலையத்தில் இருந்து சுமார் 15 டன் நிவாரணப் பொருள்கள் அனுப்பப்பட்டுள்ளன.
அவற்றில் கூடாரங்கள், தூங்கும் பைகள், போர்வைகள், சாப்பிடத் தயாராக இருக்கும் உணவுகள், தண்ணீர் சுத்திகரிப்பான்கள், சுகாதாரப் பொருள்கள், சூரிய விளக்குகள், ஜெனரேட்டர் பெட்டிகள், அத்தியாவசிய மருந்துகள் (பாராசிட்டமால், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், கேனுலா, ஊசிகள், கையுறைகள், பஞ்சுகள், சிறுநீர் பைகள் உள்ளிட்ட பிற பொருள்கள்) அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.