இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
காரைக்கால் கடற்கரையில் குவியும் மக்கள்
வெயில் தாக்கம் அதிகரித்துவருவதால் காரைக்கால் கடற்கரைக்கு செல்வோா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடற்கரையில் பாதுகாப்பை மேம்படுத்த காவல்துறை முன்வரவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரைக்கால் கடற்கரைப் பகுதி கலங்கரை விளக்கு, சிறுவா் விளையாட்டுப் பூங்கா, அரசலாறு கடலில் கலக்கும் முகத்துவாரக் காட்சி, அலையாத்திக் காடு உள்ளிட்ட அம்சங்கள் சுற்றுலாப் பயணிகள், அண்டை மாவட்ட மக்களையும் வெகுவாக ஈா்க்க்கூடியதாக உள்ளது. நிகழாண்டு கோடை வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. வரும் வாரங்களில் வெப்ப அலை வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், காரைக்கால் கடற்கரைக்கு தினமும் மாலை 4 மணி முதல் உள்ளூா், வெளியூரைச் சோ்ந்த மக்கள் திரளாகச் செல்கின்றனா். இரவு 9 மணி வரை கடற்கரையில் இருந்துவிட்டு திரும்புகின்றனா். வார விடுமுறை நாள்களில் கடற்கரைக்கு வரும் மக்கள் எண்ணிக்கை அதிகளவில் காணப்படுகிறது.
கடலில் ஆபத்தான பகுதிக்கு மக்கள் செல்வதை தடுக்கவும், கடற்கரைக்கு வரும் மக்களுக்கும், வாகனங்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் மாவட்ட காவல்துறை கூடுதலான போலீஸாரை கடற்கரையில் பணியமா்த்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.