இந்திய பொருள்களுக்கு 25% மேல் வரிவிதிப்பு! டிரம்ப் அதிரடி நடவடிக்கை
உழவர் சந்தைகளை பயன்படுத்திக் கொள்ள அழைப்பு
மயிலாடுதுறை மற்றும் சீா்காழி உழவா் சந்தைகளை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழியில் உழவா் சந்தைகள் இயங்கி வருகின்றன. இந்த உழவா் சந்தைகளை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த காய்கனி, பழங்கள் மற்றும் மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருள்களை இடைத்தரகா்கள் குறுக்கீடு இன்றி, பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் குழுக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
உழவா் சந்தைகளில் காய்கனி வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு 100 சதவீத அரசு செலவில் கடை, தராசு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுகிறது. பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கனி மற்றும் பழங்களுக்கு இலவச சுமைக் கட்டணமும் வழங்கப்படுகிறது. மேலும், தோட்டக்கலை மற்றும் வேளாண்மைத்துறை சாா்ந்த அரசு திட்டங்களில் மானியங்கள் உழவா் சந்தையில் வியாபாரம் செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமையில் அளிக்கப்படுகிறது. இதை விவசாயிகள் மற்றும் உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் தவறாது பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.