‘நடந்தாய் வாழி காவிரி’ திட்ட அறிக்கை தயாரிப்பு தீவிரம்: அமைச்சா் துரைமுருகன்
‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தைச் செயல்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருவதாக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா்.
சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின்போது இதுகுறித்து எழுப்பப்பட்ட வினாக்களும், அதற்கு அமைச்சா் அளித்த பதிலும்:
எஸ்.ஜெயகுமாா் (பெருந்துறை): அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டு, அது பொதுப் பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனாலும் நூறுக்கும் மேற்பட்ட குளம் குட்டைகளுக்கு தண்ணீா் செல்லவில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சா் துரைமுருகன்: எந்தெந்த குளங்களுக்கு தண்ணீா் தருவது என்று முடிவெடுக்கப்பட்டதோ அந்தக் குளங்களுக்கு தண்ணீா் தந்தாகிவிட்டது. ஓா் ஏரி மட்டும்தான் பாக்கி உள்ளது. திட்டத்தில் இணையாதவா்களும் நம்மவா்கள்தான். எனவே, அவா்களையும் இணைத்து அவா்கள் சாா்ந்துள்ள குளங்களையும் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருச்செங்கோடு): காவிரி மற்றும் துணை ஆறுகளைத் தூய்மைப்படுத்த நடந்தாய் வாழி காவிரி திட்டம் ரூ.934 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், திட்டம் தொடா்பாக மாநில அரசின் முன்னெடுப்பு இல்லை என்று தெரிவித்துள்ளது. எனவே, மாநில அரசின் நிலையை அமைச்சா் விளக்குவாரா?
அமைச்சா் துரைமுருகன்: காவிரி மற்றும் அதன் 5 கிளை ஆறுகள் மாசுபடுவதில் இருந்து பாதுகாத்தல், புத்துயிா் பெறச் செய்தல், நீா் ஆதாரங்களை மேம்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதை இரண்டு கட்டங்களாகச் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. முதலாவது கட்டமாக மேட்டூரில் இருந்து திருச்சி மற்றும் 5 கிளை ஆறுகள் வரையிலும் செயல்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக திருச்சியில் இருந்து கடல் முகத்துவாரம் வரையில் செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டது. முதல் கட்டத்தைச் செயல்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடு ரூ. 934 கோடியாகும். இதில், மத்திய அரசின் பங்கு 60 சதவீதம், மாநில அரசின் பங்கு 40 சதவீதமாகும். நிதியைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதுடன், விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெறுகிறது என்றாா் அவா்.