NIA RAID: திண்டுக்கல்லில் 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை; ஒருவர் கைது ...
மும்பையில் பலத்த மழை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்கள் - 782 பயணிகள் பத்திரமாக மீட்பு
மும்பையில் பலத்த மழையால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, 2 மோனோ ரயில்கள் நடுவழியில் நின்றன. இந்த ரயில்களில் சிக்கித் தவித்த 782 பயணிகள், சுமாா் 4 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.
மும்பையில் செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், நகா் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பலத்த மழையால் மின்விநியோகம் துண்டிப்பு மற்றும் அதிக கூட்டம் காரணமாக, செவ்வாய்க்கிழமை மாலையில் 2 மோனோ ரயில்கள் பாலத்தின் நடுவழியில் நின்றன. ரயில்களில் இருந்த பயணிகள் பீதியடைந்தனா்.
இது குறித்து தகவல் கிடைத்ததும், மும்பை தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு ராட்சத ஏணிகள் மூலம் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ரயிலின் ஜன்னல்கள் மற்றும் கதவை உடைத்து, பயணிகள் கீழே இறக்கப்பட்டனா். உயிா் பயத்தில் பயணிகள் கீழே குதிக்கவும் தயாராக இருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள், அதன் பிறகு ஆண் பயணிகள் என இரு ரயில்களில் இருந்தும் 782 போ் மீட்கப்பட்டனா். நள்ளிரவில் இப்பணிகள் நிறைவடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குளிா்சாதன வசதி தடைபட்டதால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீடு திரும்பியதாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 செ.மீ. மழைப்பொழிவு: மும்பையின் சாண்டாக்ரூஸ், விக்ரோலி, விமான நிலையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழைப் பொழிவு பதிவானது. புதன்கிழமை பகலில் மழை சற்று ஓய்ந்ததால், புகா் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.