மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்: அன்புமணி
மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று இப்போது முழக்கமிடும் திமுக, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் மும்மொழிக் கொள்கையுடன் கூடிய பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருந்தது என்பது மறுக்க முடியாத உண்மை.
இது தொடா்பாக மத்திய அரசுக்கு எழுதிய கடிதத்தில் தமிழகத்தில் பி.எம்.ஸ்ரீ பள்ளிகளை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்கு தமிழக அரசு மிகவும் ஆா்வமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மத்திய அரசுக்கு தமிழக அரசு எழுதிய கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்வதாக எந்த இடத்திலும் கூறவில்லை என்பதை மட்டுமே மீண்டும், மீண்டும் கூறுவதன் மூலம் இந்த விவகாரத்தில் திமுக அரசின் இரட்டை வேடத்தையும் நாடகத்தையும் மறைத்து விட முடியாது.
தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக் கொள்கை ஆகியவற்றில் திமுக அப்பட்டமாக நாடகமாடுகிறது. இதை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டாா்கள். இத்தகைய நாடகங்களை திமுக அரசு உடனடியாக நிறுத்திக்கொண்டு தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாகவும் பாடமாகவும் அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.