குடிநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பள்ளியின் தாளாளர், உதவியாளருக்கு நீதிம...
முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: கேரளம் தரப்பில் பதில் மனு தாக்கல்
நமது நிருபர்
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்களை வெட்டுவதற்கு தமிழக அரசு மத்திய வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரள அரசுத் தரப்பில் முட்டுக்கட்டை போட்டு வருவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அணைப் பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மரங்கங்களை வெட்டுவதற்கு கேரள அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஏற்கெனவே முறையீடு செய்திருந்தது.
இந்நிலையில், கடந்த பிப்ரவரியில் தமிழக அரசு தரப்பில் கூடுதல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில் பல்வேறு புகார்களை தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இதற்கு பதில் அளிக்கும் வகையில் கேரள அரசின் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் அண்மையில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதில், பாரமரிப்புப் பணிகளுக்காக மரங்களை வெட்ட அனுமதிக்கக் கோரிய தமிழக அரசின் விண்ணப்பம் காலாதியாகிவிட்டது. இதனால், மரங்களை வெட்டுவதற்கான கோரிக்கை குறித்து மத்திய அரசின் வனத் துறையின் பரிவேஷ் இணையதளத்தில் தமிழக அரசு புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அணையில் 142 அடிவரை நீரைத் தேக்கிவைக்கும் தமிழக அரசின் கோரிக்கை உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஏற்கெனவே நிறைவேற்றியுள்ளதால் அணை நீர்மட்டத்தை உயர்த்துவது தொடர்பாக மீண்டும் வலியுறுத்த முடியாது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் அமைக்கப்பட்ட மேற்பார்வைக் குழு உயிர்ப்புடன் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கும் வகையில், தமிழக அரசின் தரப்பிலும் விரைவில் பதில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.