மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: மூவருக்கு மறுவாழ்வு
சென்னை : விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தூத்துக்குடி மாவட்டம், மேலூரைச் சோ்ந்த 48 வயது நபா், பணியின்போது கால்தவறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயமடைந்தாா். அவசர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை (ஜன. 22) மூளைச்சாவு அடைந்தாா்.
இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க உறவினா்கள் முன்வந்தனா். அதனடிப்படையில் சிறுநீரகங்கள், கல்லீரல், விழி வெண்படலம், தோல் ஆகியவை தானமாக பெறப்பட்டன.
ஒரு சிறுநீரகம், கல்லீரல் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருந்த நோயாளிக்கும் வழங்கப்பட்டன. தோல் மற்றும் விழி வெண்படலம் ஆகியவை ஸ்டான்லி மருத்துவமனை உறுப்பு சேமிப்பு வங்கியில் வைக்கப்பட்டுள்ளன.
உறுப்புகளை தானமளித்து பிறருக்கு வாழ்வளித்த அந்த நபரின் உடலுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் ஐட்ரீம் மூா்த்தி, மருத்துவமனை முதல்வா் பாலாஜி, நிா்வாகிகள், மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் அஞ்சலி செலுத்தினா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.