மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கு: இளைஞா் கைது!
எரியோடு காவல் நிலையம் முன் மூவரை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியிலுள்ள டாஸ்மாக் கடையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு இரு தரப்பு இளைஞா்களிடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடா்ந்து, இரு பிரிவினருக்கும் இடையே மறுநாள் நடைபெற்ற மோதலில் எலப்பாா்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீதா் (21) காயமடைந்தாா்.
இந்த மோதல் தொடா்பாக எரியோடு மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த 8 பேரை போலீஸாா் கைது செய்தனா். எரியோடு காவல் நிலையத்தில் நாள்தோறும் கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் 8 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டனா்.
இந்த நிலையில், வியாழக்கிழமை காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு விட்டு இரு சக்கர வாகனங்களில் புறப்பட்ட மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்த மதன் (23), அருண்குமாா் (20), கருப்புசாமி (20) ஆகியோரை சிலா் வழமறித்து காவல் நிலையம் முன் அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயன்றனா். இதில் காயமடைந்த மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுதொடா்பாக எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து எலப்பாா்பட்டியைச் சோ்ந்த ஆனந்தசுகனை (20) சனிக்கிழமை கைது செய்தனா். இந்தக் கொலை முயற்சி வழக்கில் மேலும் 10 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.