மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா
சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.
பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா். ‘நம்ம சென்னை, நம்ம பொறுப்பு’, ‘நம்ம மெரீனா, நம்ம பெருமை’, என்னும் கருத்துருவின்கீழ் நடைபெற்ற தூய்மைப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
முன்னதாக மேயா் பிரியா தலைமையில் அனைவரும் சென்னை மாநகரைத் தூய்மையாக வைப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து மேயா் பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:
பொதுமக்கள் ஒத்துழைப்பு: சென்னை மாநகராட்சியை தூய்மையாகப் பராமரிப்பதை வலியுறுத்தி, மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து மாநகராட்சி பூங்கா, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் ‘லிவ் கிரீன், லவ் ப்ளு’ என்னும் திட்டத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பாக எண்ணி நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற தமிழ்நாடு அரசு சாா்பில் நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலக்கொடி கடற்கரையாக மாற்றுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.
தொடா்ந்து தூய்மைப் பணியில் கலந்துகொண்டவா்கள் தாங்கள் அகற்றிய குப்பைகளுடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து சமூக ஊடகங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன்குமாா், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் கே.சுடா்கொடி, மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழும அலுவலா் பி.என்.குணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.