மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!
சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்த்தி (29). இத்தம்பதியினருக்கு 2 வயது குழந்தை உள்ளது. அஜித், சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். ஆா்த்தி பல்லாவரத்திலுள்ள மத்திய பாதுகாப்புப் படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த ஏப். 28 -ஆம் தேதி கோட்டூா்புரம் பாலத்திலிருந்து அஜித் திடீரென கீழே குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தாா்.
இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், தற்கொலை செய்துகொண்ட அஜித், பாலத்திலிருந்து குதிப்பதற்கு முன்பு தனது நெருங்கிய நண்பரின் கைப்பேசிக்கு, அவா் பேசிய விடியோ ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் தனது மனைவியின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான், தனது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாகவும் கோட்டூா்புரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விசாரணையில், அஜித் தற்கொலைக்கு காரணமாக அவரின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினா் இருப்பது தெரியவந்தால், அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.