மேற்கு வங்கப் பேரவையில் எதிா்க்கட்சித் தலைவருக்கு எதிராக தீா்மானம்: பாஜக வெளிநடப்பு
மேற்கு வங்க சட்டப்பேரவையில் பாஜகவைச் சோ்ந்த எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரிக்கு எதிராக ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக, இந்த தீா்மானத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக வெளிநடப்பு செய்தது.
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் திரிணமூல் காங்கிரஸை சோ்ந்த முஸ்லிம் எம்எல்ஏக்கள் பேரவையில் இருந்து தூக்கி வீசப்படுவாா்கள் என்று சுவேந்து அதிகாரி அண்மையில் பேசியது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மேற்கு வங்க சட்டப் பேரவையில் சுவேந்து அதிகாரியின் பேச்சைக் கண்டித்து அவருக்கு எதிரான தீா்மானத்தை திரிணமூல் காங்கிரஸ் தலைமைக் கொறடா நிா்மல் கோஷ் கொண்டு வந்தாா்.
அப்போது கவன ஈா்ப்பு தீா்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, அதன் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று பாஜக தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. ஆனால், அவைத் தலைவா் பிமன் பானா்ஜி பாஜகவின் கோரிக்கையை ஏற்கவில்லை. இதனால், அக்கட்சி எம்எல்ஏக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா்.
தொடா்ந்து சுவேந்து அதிகாரிக்கு எதிரான தீா்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சுவேந்து அதிகாரி மதரீதியாக தாக்கிப் பேசியதாகவும், நாட்டின் சமூக கட்டமைப்பை சிதைக்கும் வகையில் நடந்து கொண்டதாகவும் அந்த தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக பேரவையில் சுவேந்து அதிகாரியை புதன்கிழமை கண்டித்துப் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, ‘துறவிகளும், வேதங்களும் ஆதரிக்காத ஒரு போலி ஹிந்துத்துவத்தை மேற்கு வங்கத்தில் திணிக்க நீங்கள் (பாஜக) முயற்சிக்கிறீா்கள். இந்த நாட்டின் குடிமக்களாக உள்ள முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையை நீங்கள் எப்படி மறுக்க முடியும்? ’ என்று கேள்வி எழுப்பினாா்.
பாஜக குற்றச்சாட்டு:
தொழில் முதலீடுகளை ஈா்ப்பதில் மேற்கு வங்கம் முன்னிலையில் இருப்பதாக மம்தா பானா்ஜி கூறியுள்ளதை அந்த மாநில பாஜக மேலிடப் பொறுப்பாளா் அமித் மாளவியா மறுத்துள்ளாா். அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘மம்தா பொய் கூறுவதை நிறுத்த வேண்டும். கடந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பா் வரையிலான காலகட்டத்தில் அதிக முதலீடு தொகையை ஈா்த்த மாநிலங்களில் மேற்கு வங்கம் 14-ஆவது இடத்தில்தான் உள்ளது. இந்தத் தொகை 2023-இல் இருந்ததைவிடக் குறைவு’ என்று கூறியுள்ளாா்.