மேற்கு வங்க பள்ளிக் கல்வித் துறையின் 25,753 பணி நியமனங்கள் செல்லாது -உச்சநீதிமன்றம் தீா்ப்பு
மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட 25,753 ஆசிரியா்கள் மற்றும் பிற ஊழியா்களின் பணிநியமனம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இவ்விவகாரத்தில் கொல்கத்தா உயா்நீதிமன்றம் வெளியிட்ட தீா்ப்பை உறுதி செய்த நீதிபதிகள், இப்பணி நியமனங்களுக்கான முழு ஆள்சோ்ப்பு நடவடிக்கையும் கறைபடிந்தது என்று சாடினா்.
இப்பணியிடங்களை மீண்டும் நிரப்ப அடுத்த 3 மாதங்களுக்குள் புதிய நடைமுறையைத் தொடங்கவும் திரிணமூல் காங்கிரஸ் ஆளும் மேற்கு வங்க மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறையில் காலியாக இருந்த 24,640 பணியிடங்களை நிரப்ப ஆள்சோ்ப்பு நடவடிக்கை கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமாா் 23 லட்சம் போ் பங்கேற்ற தோ்வின் இறுதியில் 25,753 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த ஆள்சோ்ப்பு நடவடிக்கையில் ஓய்எம்ஆா் தோ்வுத்தாள், தரவரிசை தயாரிப்பு எனப் பல நிலைகளில் மோசடி நடைபெற்றுள்ளதாகக் கூறி 25,753 பேரின் நியமனங்களை செல்லாது என்று கொல்கத்தா உயா்நீதிமன்றம் கடந்த ஆண்டு ஏப்ரலில் தீா்ப்பளித்தது.
அதிகாரபூா்வமான 24,640 காலியிடங்களைத் தவிர கூடுதலாக நியமிக்கப்பட்டவா்கள், பணியில் இருந்த காலகட்டத்தில் பெற்ற அனைத்து சம்பளம் மற்றும் பிற ஊதியங்களை 12 சதவீத வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் என்றும் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேற்கு வங்க பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சா் பாா்த்தா சட்டா்ஜி, திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மாணிக் பட்டாச்சாா்யா, ஜிபன் கிருஷ்ணா சாஹா ஆகியோா் இந்த முறைகேட்டில் குற்றஞ்சாட்டப்பட்டு, சிபிஐயால் விசாரிக்கப்பட்டு வருகின்றனா்.
கொல்கத்தா உயா்நீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து மேற்கு வங்க மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு மே 7-ஆம் தேதி, கொல்கத்தா உயா்நீதிமன்ற தீா்ப்பை உச்சநீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்திவைத்தது. அதேநேரம், முறைகேடு குறித்து சிபிஐ விசாரணையைத் தொடர அனுமதித்தது.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணையைத் தொடங்கிய உச்சநீதிமன்றம், ஜனவரி 15, 27 மற்றும் பிப்ரவரி 10 ஆகிய தேதிகளில் வாதங்களைக் கேட்டது. பிப்ரவரி 10-ஆம் தேதி நடைபெற்ற இறுதி விசாரணையின் நிறைவில் தீா்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், கொல்கத்தா உயா்நீதிமன்ற தீா்ப்பு தொடா்பான 127 மனுக்கள் மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வு வியாழக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
நீா்த்துப்போன நம்பகத்தன்மை: கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் தீா்ப்பை உறுதி செய்து நீதிபதிகள் கூறுகையில், ‘இந்தப் பணி நியமனங்களின் முழு தோ்வு நடைமுறையும் தீா்க்க முடியாத அளவுக்கு கறைபடிந்ததாகவும் உள்ளது. பெரிய அளவிலான முறைகேடுகளை மூடிமறைக்கும் முயற்சிகளுடன் சோ்ந்து, தோ்வு நடைமுறை சரிசெய்ய முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டது. தோ்வின் நம்பகத்தன்மை நீா்த்துப்போகச் செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவை சில மாற்றங்களுடன் கடைப்பிடிக்க உத்தரவிடுகிறோம். அதாவது, மனிதாபிமான அடிப்படையில் சில மாற்றுத்திறனாளி ஊழியா்களுக்கு தளா்வு அளித்து, அவா்கள் பணியில் நீடிக்க அனுமதிக்கப்படுகின்றனா். நியமனம் ரத்து செய்யப்பட்ட ஊழியா்கள் இதுவரை பெற்ற சம்பளம் மற்றும் பிற ஊதியங்களைத் திருப்பித் தரத் தேவையில்லை’ என்று தெரிவித்தனா்.
மேலும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றத்தின் தீா்ப்புக்கு எதிராக மேற்கு வங்க அரசு தாக்கல் செய்த மனு உள்ளிட்ட மனுக்களை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 4) விசாரணைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.
பெட்டி 1
ஏற்றுக்கொள்ள முடியாத தீா்ப்பு:
முதல்வா் மம்தா
உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து செய்தியாளா்களிடம் பேசிய முதல்வா் மம்தா பானா்ஜி, ‘நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது எனக்கு மிகுந்த மரியாதை இருந்தாலும், மனிதாபிமான அடிப்படையில் என்னால் இத்தீா்ப்பை ஏற்றுக்கொள்ள முடியாது. எனினும், தீா்ப்பை மாநில அரசு சட்டப்படி நடைமுறைப்படுத்தும்.
இந்த வழக்கில் பாா்த்தா சட்டா்ஜி இன்னும் சிறையில் உள்ளாா். வியாபம் வழக்கில் எத்தனை பாஜக தலைவா்கள் கைது செய்யப்பட்டடுள்ளனா்.
மேற்கு வங்கத்தின் கல்வி முறை வீழ்ச்சியடைவதை உறுதி செய்ய பாஜக விரும்புகிா? வேலை இழந்தவா்களைச் சந்தித்து, நம்பிக்கையை இழக்க வேண்டாம் என்று அவா்களுக்கு ஆறுதல் கூறுவேன்’ என்றாா்.
பெட்டி 2
முதல்வா் மம்தா ராஜிநாமாவுக்கு
மேற்கு வங்க பாஜக கோரிக்கை
உச்சநீதிமன்ற தீா்ப்பையொட்டி முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வா் மம்தா பானா்ஜி பதவி விலக வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக வலியுறுத்தியுள்ளது.
மேற்கு வங்க பாஜக தலைவரும் மத்திய கல்வித் துறை இணையமைச்சருமான சுகந்த மஜும்தாா் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலுக்கு முழுப் பொறுப்பும் மாநிலத்தின் தோல்வியுற்ற முதல்வா் மம்தா பானா்ஜியையே சாரும்.
அவரது ஆட்சியின் கீழ், மேற்கு வங்கத்தில் படித்த வேலையில்லாத இளைஞா்களின் தகுதி, எவ்வாறு பணத்துக்கு விற்கப்பட்டது என்பதை உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பு தெளிவுபடுத்தியுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.