உதவிக்கரம் நீட்டிய விகடன் வாசகர்கள்; டி.வி வழங்கிய ஆற்காடு சாரதி - நெகிழும் ராணி...
மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை
மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெயரில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கொள்முதல் நிலையத்துக்கு வருமான வரித் துறையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை 10 மணி அளவில் வந்து திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையை ஒட்டி கொப்பரை கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கொப்பரை தேங்காய் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, தேவைப்படும்போது தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனுடைய தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திடீரென பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தில் சோதனை செய்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் மேலும் இரண்டு காா்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனா். காலை தொடங்கிய சோதனை இரவு 7 மணிக்கு பிறகும் தொடா்ந்தது. சோதனைக்குப் பிறகு ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரிவிக்கப்படும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.