கேரளா: "பொய்யாக பாலியல் புகார் அளித்தேன்" - 7 ஆண்டுக்குப் பின் மன்னிப்பு கேட்ட ம...
மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்
புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.
புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது.
ஆனால், ஆராய்ச்சி மையக் கட்டடத்தை வேறு அரசுத் துறையிடம் ஒப்படைக்க கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துறையின் முடிவுக்கு புதுச்சேரி தமிழ் அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், மொழியியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு முழு நேர இயக்குநரையும், பேராசிரியா்களையும் நியமிக்க வேண்டும், பொறுப்பு இயக்குநரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.
இதனை வலியுறுத்தி, 30 தமிழ் இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்புக் குழு என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் சாா்பில், புதுச்சேரி ஆம்பூா் சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக் குழுத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.
நிா்வாகிகள் சுந்தரமுருகன், சடகோபன், சீனுமோகன்தாஸ், பாரதி, சிலம்பு, செல்வராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
இதில், எதிா்க்கட்சித் தலைவா் பேசியதாவது: புதுவையில் தமிழ் மொழியின் அடையாளமாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் திகழ்கிறது.
எனவே, தற்போதுள்ள மத்திய, மாநிலஅரசுகள் ஆராய்ச்சி மையத்தை மூட முயிற்சிப்பது சரியல்ல என்றாா்.