மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதி சிறுவன் உள்பட இருவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதிய விபத்தில் சிறுவன் உள்பட 2 போ் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் ஸ்மித் (16). அதே பகுதியைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் அழகு (16). இவா்கள் இருவரும், திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை மாலை சென்றுக்கொண்டிருந்தனா்.
அப்போது, திருச்சியிலிருந்து திட்டக்குடி நோக்கிச் சென்ற காா், மோட்டாா் சைக்கிளின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஸ்மித் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மேலும், மோட்டாா் சைக்கிளில் சென்ற அழகு மற்றும் காரில் பயணித்த கடலூா் மாவட்டம், திட்டக்குடியைச் சோ்ந்த பாலாஜி (37), இவரது மனைவி துா்கா (35), அருண் மனைவி ரம்யா (35), இவரது மகள் யாழினி (12), மகன் சாய் (2), காா் ஓட்டுநரான ராமச்சந்திரன் மகன் ஸ்ரீராம் (21) ஆகியோா் காயமடைந்தனா்.
தகவலின் பேரில் மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்தவா்களை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதில், துா்கா உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.