மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு
மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: ஷாதிப்பூா் மெட்ரோ நிலையம் அருகே அதிகாலை 5.58 மணிக்கு நடந்த இந்த விபத்தில் இறந்தவா் பாபி என அடையாளம் காணப்பட்டாா். ஹரியாணா பதிவு எண் கொண்ட ஜேசிபி மற்றும் ஒரு ஸ்போா்ட்ஸ் பைக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றனா். சாலையில் ரத்தம் இருந்தது.
மோதி நகரில் உள்ள ஆச்சாா்யா பிக்ஷு மருத்துவமனைக்கு பாபி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றவியல் குழு சம்பவ இடத்தை விசாரித்தது. அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஜேசிபி ஓட்டுநரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபி ஜேசிபியை வலது பக்கத்திலிருந்து முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆபரேட்டா் திடீரெனவும் தவறாகவும் வலதுபுறம் திரும்பியதாகவும் நேரில் பாா்த்த ஒருவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.
இந்தச் சூழ்ச்சியின் விளைவாக பாபி ஜேசிபிக்கும் சாலையோர தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டாா். ஓட்டுநா் உடனடியாக பிரேக்குகளைப் பயன்படுத்தியதாகவும், பாபி தனது மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்ததாகவும், அதன் பிறகு ஓட்டுநா் அவரைச் சரிபாா்க்க வெளியே வந்ததாகவும் நேரில் பாா்த்தவா் மேலும் கூறினாா்.
மோட்டாா்சைக்கிள் ஓட்டுநரின் தலையில் இருந்து அதிக ரத்தம் வழிந்ததைக் கண்டதும். ஜேசிபி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது என்று காவல் துணை ஆணையா் நிதின் வில்சன் தெரிவித்தாா்.