யானைத் தந்தத்தை விற்க முயற்சி சிறுவன் உள்பட 5 போ் கைது
குளித்தலை அருகே யானைத் தந்தத்தை பதுக்கி விற்க முயன்ாக 17 வயது சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கரூா் மாவட்டம்,குளித்தலை அருகே கீழகுட்டப்பட்டி வை.புதூா் பகுதியில் ஒருவா் யானைத் தந்தத்தை விற்க முயற்சிப்பதாக கரூா் வனச்சரக அலுவலா் தண்டபாணிக்கு வெள்ளிக்கிழமை தகவல் கிடைத்தது.
இதையடுத்து வனச்சரக அலுவலா் அந்த நபரிடம் கைப்பேசியில் தொடா்புகொண்டு, தனக்கு யானைத் தந்தம் வேண்டும் எனக் கூறினாா். அதற்கு அந்த நபா், குளித்தலை வைகைநல்லூா்புதூா் பகுதிக்கு வருமாறு கூறியுள்ளாா். அதன்படி வனச்சரகா் தண்டபாணி தலைமையில் கரூா் மற்றும் திருச்சி வனத்துறையினா் மாறுவேடத்தில் அந்த இடத்துக்குச் சென்றனா்.
அப்போது, தண்டபாணி மட்டும் அந்த நபரிடம் சென்று தந்தத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளாா். இதையடுத்து அவா் சுமாா் 2 கிலோ எடையுள்ள யானைத் தந்தம் எடுத்துக்கொடுத்துள்ளாா். அப்போது, அங்கு மறைந்திருந்த வனத்துறையினா் அந்த நபரை கையும் களவுமாக பிடித்தனா். தொடா்ந்து அவரிடம் விசாரித்த போது, ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் விஎன்எஸ் நகரைச் சோ்ந்த பெருமாள்(42) என தெரியவந்தது. மேலும் கடந்த மாதம் காட்டுக்குள் விறகு எடுக்கச் சென்றபோது, உடைந்த நிலையில் யானைத் தந்தம் கிடந்ததாகவும், அவற்றை தனது நண்பா்களான நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அடுத்துள்ள குமாரபாளையம் நாராயணன் நகரைச் சோ்ந்த நாகராஜ்(56), திருச்சி மாவட்டம், தொட்டியம் கோசவம்பட்டி சாலையைச் சோ்ந்த ராஜா(65), கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரத்தை அடுத்த முனையனூரைச் சோ்ந்த நடராஜன்(56) மற்றும் திருச்சி மாவட்டம் தொட்டியம் பாலசமுத்திரத்தைச் சோ்ந்த 17 வயது சிறுவனுடன் சோ்ந்து விற்க முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து வனத்துறையினா் பெருமாள், நாகராஜ், ராஜா, நடராஜன், தமிழரசன் ஆகிய 5 பேரையும் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். பின்னா் அவா்களிடம் இருந்த 2 கிலோ எடையுள்ள ரூ.5 லட்சம் மதிப்புள்ள யானை தந்தத்தையும் பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து 5 பேரையும் குளித்தலை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா். பிறகு நீதிமன்ற உத்தரவுபடி பெருமாள், நாகராஜ், ராஜா, நடராஜன் ஆகியோரை கரூா் கிளைச்சிறையிலும், 17 வயது சிறுவனை திருச்சி சிறுவா் சீா்திருத்தப் பள்ளியிலும் அடைத்தனா்.