யுஜிசி வரைவு நெறிமுறைகளுக்கு எதிரான நம் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும்: மு.க.ஸ்டாலின்
பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகரில் தில்லியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மத்திய பாஜக அரசின் பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப்பெற வலியுறுத்தி, தில்லி ஜந்தா் மந்தரில் திமுக மாணவரணி சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாணவா் அணியின் மாநில, மாவட்ட, மாநகர அமைப்பாளா்கள் தங்களது துணை அமைப்பாளா்கள் மற்றும் மாணவா் அணியினர், இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்கள் என பெருமளவில் பங்கேற்றனர்.
இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, தமிழ் மக்களுக்கு 4000 ஆண்டு வரலாறு இருக்கிறது. தொன்மையான மொழியும் பண்பாடும் இருக்கிறது. யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்வி சம்பந்தப்பட்டது அல்ல. அது உங்களின் மொழி, பண்பாடு ஆகியவற்றின் மீது ஆர்எஸ்எஸ் தொடுக்கும் தாக்குதல். பிற பண்பாடுகளையும் வரலாறுகளையும் அழித்து ஒற்றைத் தன்மையை திணிப்பதுதான் ஆர்எஸ்எஸ் லட்சியம். ஆர்எஸ்எஸ்ஸின் காலாவதியான சித்தாந்தம் திணிக்கப்படுவதை நாம் கடுமையாக எதிர்க்க வேண்டும் என கூறினார்.
சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், கல்வி உரிமைக்காக, திமுக தொடர்ந்து போராடி வருகிறது. புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து பல போராட்டங்களை திமுக முன்னெடுத்து வருகிறது. அத்தனைப் போராட்டங்களையும் திமுகவுடன் சமாஜ்வாதி கட்சி துணை நிற்கும் என கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில், ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஜனநாயகம் பாதுகாக்கப்படும். யுஜிசி வரைவு நெறிமுறைகள் அகற்றப்பட வேண்டும். கல்வியாளர்கள் மட்டுமே குழுவில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் கல்வித்துறை பாதுகாக்கப்படும். திமுக மாணவர் அணி கையில் எடுத்துள்ள இந்தப் போராட்டம் வெற்றி பெறும் என கூறினார்.
இந்த நிலையில், பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து தலைநகரில் தில்லியில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தலைநகர் தில்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்க்கும் போராட்டத்தில் மாணவர்களின் குரலை வலுப்படுத்தியதற்காகவும், கல்வியின் எதிர்காலத்தைப் பாதுகாக்கத் தோள் கொடுத்தமைக்காகவும் நமது கழக மாணவரணியினர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சகோதரர்கள் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்களுக்கு எனது நன்றிகள்.
பயிர்க் கடன் தள்ளுபடி எப்போது?: அண்ணாமலை கேள்வி
பன்மைத்துவம் கொண்ட வரலாறு, பண்பாடு மற்றும் மொழிகளை அழித்து ஒற்றைத்துவத்தைத் திணிப்பது என ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க.,வின் செயல்திட்டம் தெளிவாக உள்ளது.
"யுஜிசி வரைவு நெறிமுறைகள் வெறும் கல்விசார்ந்த நகர்வல்ல, அது தமிழ்நாட்டின் வளமான மரபின் மீதும், இந்தியக் கூட்டாட்சியியலின் அடிப்படை மீதும் தொடுக்கப்படும் தாக்குதலாகும்” எனச் சகோதரர் ராகுல் காந்தி மிகச் சரியாகச் சுட்டிக்காட்டினார்.
நீட், குடியுரிமைத் திருத்தச் சட்டம் முதல் மூன்று வேளாண் சட்டங்கள் வரை நமது அரசியலமைப்பினையும் பன்மைத்துவத்தையும் காப்பதற்கான அனைத்துப் போராட்டங்களையும் திமுக முன்னின்று நடத்தியுள்ளது. இன்று தலைநகரில் முழங்கிய நம் குரல் இந்தியாவெங்கும் எதிரொலிக்கும்! என கூறியுள்ளார்.