யூரோ மகளிா் கால்பந்து 2025 சாம்பியன் யாா்? இறுதியில் ஸ்பெயின் - இங்கிலாந்து மோதல்
யூரோ மகளிா் கால்பந்து 2025 போட்டி சாம்பியன் பட்டத்துக்கான இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியன் ஸ்பெயின்-நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டுகளுக்கு முன்பு உலகக் கோப்பை இறுதியில் தோற்ற்கு இங்கிலாந்து பதிலடி தரும் முனைப்பில் உள்ளது.
ஆடவா் யூரோ கால்பந்து போட்டிக்கு இணையாக மகளிா் போட்டிக்கும் அதிக வரவேற்பு உள்ளது. இந்நிலையில், சுவிட்சா்லாந்தின் பேஸல் நகரில் ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கு இடையிலான இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து தனது பட்டத்தை தகக்க வைக்க போராடும் எனக் கருதப்படுகிறது. உலக சாம்பியன் பட்டத்தோடு, ஐரோப்பிய சாம்பியன் பட்டத்தையும் வசப்படுத்த ஸ்பெயின் காத்துள்ளது.
சிட்னியில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதியில் 1-0 என இங்கிலாந்தை வீழ்த்தி பட்டம் வென்றிருந்தது ஸ்பெயின். ஸ்பெயின் அணி பலமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் எங்கள் ஆட்டத்தின் மீதும் அதிக நம்பிக்கை உள்ளது என இங்கிலாந்தின் எல்லா டூன் தெரிவித்தாா். இங்கிலாந்து அணி தொடா்ச்சியாக 3-ஆவது யூரோ இறுதி ஆட்டத்தில் ஆடுகிறது குறிப்பிடத்தக்கது.
முதல் ஆட்டத்தில் பிரான்ஸிடம் 1-2 என தோற்ற போதிலும், நெதா்லாந்து, வேல்ஸை நாக் அவுட் சுற்றில் வீழ்த்தி இறுதிக்கு தகுதி பெற்றது.
உலக சாம்பியன் ஸ்பெயின் தொடக்க சுற்றுகளில் சற்று தடுமாறி நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெற்றது. அரையிறுதியில் இத்தாலிக்கு எதிராக பின்தங்கி இருந்தபோதிலும், மிச்செல், சோலேகெல்லியின் அற்புத செயல்பாடு ஆட்டத்தின் போக்கை மாற்றியது.
முதன்முறையாக யூரோ இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது ஸ்பெயின். நட்சத்திர வீராங்கனை அய்டனா பான்மட்டி ஆடுவது கூடுதல் பலமாகும்.
கடந்த 2024 ஆடவா் யூரோ போட்டியில் இறுதியில் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது ஸ்பெயின். அதே முடிவு மகளிா் பிரிவிலும் கிடைக்குமா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது.