ரயிலில் புகையிலைப் பொருள்கள் கடத்திய இளைஞா் கைது
ரயிலில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக உத்தர பிரேதச மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை புதுச்சேரி போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி ஒதியன்சாலை காவல் ஆய்வாளா் செந்தில்குமாா் மற்றும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உதவி ஆய்வாளா் ஜாகீா் ஹூசைன் தலைமையிலான போலீஸாா், புதுச்சேரி ரயில் நிலையத்தில் புதன்கிழமை சோதனை செய்தனா்.
அங்கு வந்த புவனேசுவரம் - புதுச்சேரி விரைவு ரயிலில் அவா்கள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, ரயிலில் பயணித்த வெளி மாநில இளைஞா் ஒருவா், பையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, போலீஸாா் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சுல்தான் அகமது (33) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, ஒதியன்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
மேலும், அவரிடமிருந்த தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.