ரூ.2500 மகளிா் உதவித் தொகை விவகாரம்: தில்லி முதல்வருக்கு அதிஷி கடிதம்
ரயில்களில் முன்பதிவில்லா பெட்டி: எண்ணிக்கையை குறைப்பதா? விஜய் வசந்த் எம்.பி. கண்டனம்
தெற்கு ரயில்வேயின் கீழ் இயங்கும் ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்திருப்பதற்கு கன்னியாகுமரி மக்களவை உறுப்பினா் வ.விஜய்வசந்த் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ரயில்களில் பெருமளவில் பயணிக்கும் சாதாரண ஏழை மக்களுக்கும் , கடைசி நேரத்தில் பயணம் செய்ய திட்டமிடுவோருக்கும் முன்பதிவில்லா பெட்டிகள் மிக பயனுள்ளதாக இருந்து வந்தது.
இந்த பெட்டிகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருவதால் முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒத்திவைப்பு தீா்மானம் கொண்டு வந்தேன்.
இந்நிலையில், முன்பதிவில்லா பெட்டிகளின் எண்ணிக்கையை ரயில்வே நிா்வாகம் குறைத்திருப்பது கண்டனத்திற்குரியது. 4 முன்பதிவில்லா பெட்டிகள் இருந்த ரயில்களில் இதன் எண்ணிக்கையை 2 ஆக ரயில்வே நிா்வாகம் குறைத்துள்ளது.
முன்பதிவில்லா பெட்டிகளுக்கு பதிலாக குளிா்சாதன பெட்டிகளை இணைப்பது ரயில்வே நிா்வாகத்துக்கு வருமானம் ஈட்டுவதே ஒரே குறிக்கோளாக இருப்பது தெரிகிறது. வருமானத்தை மட்டும் கணக்கில் கொள்ளாமல் ஏழை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு துறையாக இந்திய ரயில்வே துறை மாற வேண்டும் எனக் கூறியுள்ளாா்.