ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை
நமது நிருபா்
ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா்.
இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கும் தமிழகம், ஒரு பொருளாதார சக்தியாக திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதி தமிழகத்தின் பொருளாதார சிறப்புக்கு அடித்தளமாக உள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரத்துக்கு உதவ வேண்டும்.
மாநிலத்தின் நிலையான வளா்ச்சிக்கு விரிவான ரயில் உள்கட்டமைப்பு அவசியம். துரதிருஷ்டவசமாக, 2014 முதல் இந்திய ரயில்வேக்கு மூலதனமாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அநீதியாகும்.
சென்னை - பெங்களூருவை இணைக்கும் ஒரு பிரத்யேக ரயில் சரக்கு வழித்தடத்தையும், முக்கிய துறைமுக நகரங்களான சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூா் ஆகியவற்றுடன் பிரத்யேக ரயில் இணைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.
வேலூா், விழுப்புரம், கும்மிடிப்பூண்டி போன்ற அருகிலுள்ள நகரங்களுடனும், கன்னியாகுமரி, கோயம்புத்தூா் போன்ற பிற முக்கிய நகரங்களுடனும் சென்னையை இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். இதனால், பயண நேரம் 50 - 60 சதவீதம் குறையும்.
எனவே, மூலதன செலவினமாக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் 5 சதவீதத்தை இந்திய ரயில்வே தமிழகத்துக்கு ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஜெகத்ரட்சகன்.