தஞ்சாவூர் அருகே குளத்தில் மூழ்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு அரசு ...
ரயில்வே கடவுப்பாதை ஆய்வு அறிக்கை: 2 வாரத்தில் சமா்ப்பிக்க உத்தரவு
ரயில்வே கடவுப் பாதைகளின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிப்படுத்துவதுடன், தற்போதைய நிலை அந்தப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைத்தல் போன்றவை குறித்து 15 நாள்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய தெற்கு ரயில்வே உயரதிகாரிகள் அந்தந்த கோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளனா்.
கடலூா் மாவட்டம் செம்மங்குப்பம் ரயில்வே கடவுப் பாதையில் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி விபத்தில் 3 மாணவா்கள் இறந்த சம்பவத்தைத் தொடா்ந்து, ரயில்வே கடவுப் பாதைகளில் கடைப்பிடிக்கவேண்டிய புதிய விதிமுறைகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சா் அஷ்விணி வைஷ்ணவ் அறிவுறுத்தியுள்ளாா்.
அதன்படி, தெற்கு ரயில்வே கோட்டங்களில் உள்ள 1,643 ரயில் கடவுப் பாதைகளில் கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், குறிப்பிட்ட நேரங்களில் ரயில்வே கேட் மூடப்பட்டதை உறுதிப்படுத்தவும், தேவையான இடங்களில் சுரங்கப்பாதை, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்டவற்றை செயல்படுத்தவும் மத்திய ரயில்வே துறை அமைச்சா் உத்தரவிட்டுள்ளாா்.
இதையடுத்து, ரயில் செல்லும்போது கடவுப் பாதை கேட் மூடப்பட்டுள்ளதா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என ரயில் நிலைய அலுவலா்களுக்கு தெற்கு ரயில்வே சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்பேரில், தினமும் பகல், இரவு நேரங்களில் ரயில் கடவுப் பாதையில் உள்ள பணியாளா்களைக் கண்காணிக்கவும் ரயில் பாதுகாப்புப் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கையின்பேரில், புதன்கிழமை இரவு அரக்கோணம் பிரிவில் பணியின்போது உறங்கியதாக 2 கடவுப் பாதை பணியாளா்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என ரயில்வே உயரதிகாரிகள் தெரிவித்தனா்.
அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு: சென்னை கோட்டத்தில் உள்ள ரயில்வே பிரிவுகளில் உள்ள ரயில் கடவுப் பாதைகள் விவரம், தற்போதைய நிலை, ரயில் கேட்டுகளைக் கண்காணிப்பதற்கான கண்காணிப்புக் கேமராக்கள்அமைப்பதற்கான வசதிகள்,தேவையான இடங்களில் சுரங்கப்பாதை அல்லது மேம்பாலம் ஆகியவை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை அந்தந்த பிரிவு அதிகாரிகள் ஆராயந்து 2 வாரங்களுக்குள் கோட்ட உயரதிகாரிகளிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.