பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
ரஷிய எண்ணெய் கொள்முதல் போருக்கான நிதியுதவி..! இந்தியா மீது டிரம்ப் ஆலோசகர் தாக்கு!
ரஷியாவிடமிருந்து எண்ணெய் கொள்முதல் செய்வது, உக்ரைன் மீது நடத்தப்படும் போருக்கான நிதியுதவி என இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவுக்கான 40 சதவிகிதத்துக்கும் அதிகமான கச்சா எண்ணெய் தேவை ரஷியாவிடம் இருந்துதான் பெறப்படுகிறது. இந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் ரஷியாவிடம் இருந்து ஒரு நாளைக்கு இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் 20 லட்சம் பீப்பாயாக அதிகரித்துள்ளது.
உக்ரைனுடன் போரில் ஈடுபடும் ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக குற்றஞ்சாட்டி இந்திய பொருள்கள் மீது ஏற்கெனவே விதித்த 25 சதவீத வரியுடன் கூடுதலாக 25 சதவீத வரியை அமெரிக்கா அண்மையில் விதித்தது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் கடும் எதிா்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளைக்கு 20 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் ஒரு நாளைக்கு ரஷியாவிடம் இருந்து 16 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்த நிலையில் இம்மாதம் இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் ஆலோசகரும், பொருளாதார நிபுணர் பீட்டர் நவரோ இந்தியாவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், “அமெரிக்காவுடனான வர்த்தகத்தில் இருந்து சம்பாதித்த டாலர்களை ரஷியாவின் எண்ணெயை வாங்க இந்தியா பயன்படுத்துகிறது. இதனால், இந்தியாவை எங்கு அடித்தால் வலிக்கும் என்பது அறிந்து அங்கு தாக்குவோம்.
இந்தியாவின் நிதி உதவியின் உதவியுடன் ரஷியா, தொடர்ந்து உக்ரைனை தாக்கி வருகிறது. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வரி செலுத்துவோர், உக்ரைனின் பாதுகாப்பிற்கு உதவ பல்லாயிரக்கணக்கான பில்லியன்களை செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், அதிக வரிகள் மற்றும் வர்த்தக தடைகளால் அமெரிக்க ஏற்றுமதி பாதிக்கப்பட்டாலும், இந்தியா அமைதியாகவே இருக்கிறது. ரஷியா - உக்ரைன் இடையிலான போரில் 3 லட்சத்துக்கும் அதிகமான வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ரஷியாவிடம் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய்யை வாங்கி, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவிற்கு பதப்படுத்தப்பட்ட பெட்ரோலியப் பொருள்களை இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இதன்மூலம், அதிகளவில் லாபம் ஈட்டுகிறது.
இந்தியா, 2022 ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தது உள் நாட்டுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இல்லை” என்றும் கடுமையாகத் தாக்கியுள்ளார்.