பழங்குடியினரின் 8 கோடி சதுர அடி நிலத்தை அதானிக்கு வழங்கிய அசாம் அரசு!
தோட்டங்களில் காணப்படும் முடியில்லா 'ஸோம்பி அணில்கள்’ - மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துமா?
அமெரிக்காவில் பொதுவாக அழகாகக் கருதப்படும் அணில்கள், தற்போது புண்கள் மற்றும் முடியில்லாமல் ‘ஸோம்பி அணில்கள்’ என்று அழைக்கப்படும் வினோதமான தோற்றத்தில் காணப்படுகின்றன.
இந்த அசாதாரண நிலைக்கு ஸ்குரல் ஃபைப்ரோமாடோசிஸ் (squirrel fibromatosis) என்ற வைரஸ் காரணம் என்று வனவிலங்கு நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட அணில்களை மனிதர்கள் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
‘ஸோம்பி அணில்கள்’ என்றால் என்ன?
`ஸ்குரல் ஃபைப்ரோமாடோசிஸ்' என்ற வைரஸ் அணில்களைத் தாக்குவதால் , அவற்றின் தோலில் புரையோடு கட்டிகள் ஏற்படுகின்றன. இந்தக் கட்டிகள் சீழ் வடியக்கூடியவையாக உள்ளன. இதனால் அணில்கள் புண்கள் மற்றும் முடியில்லாத பகுதிகளுடன் ‘ஸோம்பி’ போன்ற தோற்றத்தைப் பெறுகின்றன என்று LADBible இதழ் தெரிவிக்கிறது.

டெய்லி மெயில் இதழின்படி, 2023 ஆம் ஆண்டு முதல் இத்தகைய அணில்கள் வனப்பகுதிகளிலும் தோட்டங்களிலும் காணப்படுவதாக மக்கள் அறிவித்து வருகின்றனர்.
பெரும்பாலான அணில்கள் இந்த நோயிலிருந்து குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில் இந்த வைரஸ் உள் உறுப்புகளைத் தாக்கி, அணில்களின் மரணத்திற்கு வழிவகுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வனவிலங்கு நிபுணர்களின் கூற்றுப்படி, ``தோட்டங்களில் பறவைகளுக்கு உணவு வைக்கப்படும் பறவை உணவுப் பாத்திரங்கள் இந்த நோய் பரவுவதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம். இந்த இடங்களில் அணில்கள் ஒன்று கூடுவதால், நோய் ஒரு அணிலிலிருந்து மற்றொரு அணிலுக்கு எளிதில் பரவுகிறது" என்று கூறுகின்றனர்.
மனிதர்களுக்கு ஆபத்து உள்ளதா?
இந்த வைரஸ் மனிதர்களை பாதிப்பதில்லை. இருப்பினும், பாதிக்கப்பட்ட அணில்களைத் தொடுவதையோ அல்லது அவற்றுக்கு உதவ முயற்சிப்பதையோ தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இந்த அணில்கள் தாமாகவே குணமடைவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்ற மற்றொரு நோய்
இதற்கு முன்னர், அமெரிக்காவில் முயல்கள், ஷோப் பாபிலோமா வைரஸ் (CPRV) என்ற நோயால் பாதிக்கப்பட்டு, தலையில் மோசமான கட்டிகளுடன் காணப்பட்டதாக அறிக்கைகள் வெளியாகியுள்ளன. இந்த நோயும் அணில்களைப் பாதிக்கும் வைரஸைப் போலவே வினோதமான தோற்றத்தை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.