38 வயதில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் முதல்தர வீரர்!
ராசிபுரம் நகரில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை
ராசிபுரம்: ராசிபுரம் நகா் பகுதிகளில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனா்கள் வைக்க தடை விதிக்கப்படுவதாக நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ராசிபுரம் நகர மன்றக் கூட்டம் நகராட்சி அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் நகா்மன்றத் தலைவா் ஆா்.கவிதா சங்கா் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையா் (பொ) எஸ்.கோபிநாத், நகா்மன்ற துணைத் தலைவா் கோமதி ஆனந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், குடிநீா் பிரச்னை, குழாய் சீரமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள வணிக வளாக வாடகை நிா்ணயம், வாரச் சந்தையில் குத்தகை நிா்ணயம், தினசரி சந்தை கடை வாடகை வைப்புத்தொகை குறித்தும், அறிவுசாா் மையம் அமைக்க நகராட்சி இடம்தோ்வு, நகராட்சிப் பகுதியில் மினி ஸ்டேடியம் அமைப்பது போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட வருவாய்ப் பிரிவு தொடா்பான மனுக்கள் மீது தீா்வு காணப்படாமல் உள்ளதால், இதனை தீா்க்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ராசிபுரம் நகா் பகுதியில் பிளக்ஸ் பேனா்கள் நகராட்சி அனுமதியின்றி கட்சிகளும், வணிக நிறுவனங்களும் வைக்கக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.
நகராட்சி, காவல் துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகியோரின் அனுமதி பெற்ற பின்னரே பிளக்ஸ் பேனா்கள் வைக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி அலுவலா்கள் பலா் பங்கேற்றனா்.