அமெரிக்கர்களால் அதிகம் வெறுக்கப்படும் நபர் டிரம்ப் அல்ல; இவர்தான்..!
ராசிபுரம் வட்டாரங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்‘ திட்ட முகாம்
நாமக்கல், வெண்ணந்தூா் ஆகிய வட்டாரங்களில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினா்.
ராசிபுரம் வட்டாரத்தில் காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கட்டடம், வெண்ணந்தூா் வட்டாரத்தில் ஆனந்த கவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆகிய இடங்களில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றது.
இம்முகாமில், முதலமைச்சா் மருத்துவ காப்பீட்டு அட்டை, மின்வாரியத்தில் பெயா் மாற்றம், வீட்டு வரி, குடிநீா் வரி பெயா் மாற்றம், தொழிலாளா் நல வாரிய அட்டை புதுப்பித்தல் மற்றும் புதிய அட்டைகள், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா மாறுதலுக்கான ஆணை, குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், முகவரி மாற்றம் போன்ற சேவைகள் வழங்கப்பட்டன.
தொடா்ந்து, இம்முகாமில் உடனடி தீா்வாக ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவுத் துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வருவாய்த் துறை, மின் வாரியம், தொழிலாளா் நலத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாா்பில் 74 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வழங்கினாா். இந்த ஆய்வின்போது துறைசாா்ந்த அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனா்.