முழு நிலவு வெளிச்சத்தில் போர் கதைகள்! - லே முதல் கார்கில் வரை | திசையெல்லாம் பனி...
ராசிபுரம் - வெண்ணந்தூா் பகுதியில் ரூ. 140 கோடியில் திட்டப் பணிகள்: அரசு கூடுதல் செயலா் ஆய்வு
ராசிபுரம்: நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூா், ராசிபுரம் ஒன்றியங்களில் ரூ. 139.80 கோடியில் நடைபெற்றுவரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை கூடுதல் செயலாளா் ககன்தீப்சிங் பேடி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கீழூா் ஊராட்சி, கிழக்கு தொடா்ச்சி மலை, போதமலையில் கீழூா், மேலூா், கெடமலையை இணைக்கும் வகையில், ரூ. 139.65 கோடியில் 31 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளை அரசின் கூடுதல் செயலா் ககன்தீப்சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். மேலும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளின் எண்ணிக்கை, பொதுமக்கள் விவரம், சாலைப் பணியின் விவரம் குறித்து கேட்டறிந்து, மலைவாழ் மக்களுடன் கலந்துரைடியானாா்.
மலைவாழ் மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா, மின் இணைப்பு, கலைஞா் கனவு இல்லம், பள்ளிகள், நியாயவிலைக் கடை, மகளிா் சுயஉதவிக்குழு கட்டடம், நூலகம், தடுப்பணை ஆகியவை அரசின் விதிமுறைகளுக்கு உள்பட்டு, அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவா் உறுதியளித்தாா்.
முன்னதாக, வெண்ணந்தூா் ஊராட்சி ஒன்றியம் ஆலாம்பட்டி ஊராட்சியில் ரூ. 2.40 லட்சத்தில் முதல்வரின் வீடுகள் மறுகட்டுமானம் திட்டத்தின்கீழ் வீடு கட்டப்பட்டு வருவதையும், ராசிபுரம் ஊராட்சி ஒன்றியம் கோனேரிப்பட்டி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நா்சரியில் ரூ. 6.08 லட்சத்தில் 10 ஆயிரம் மரக்கன்று உற்பத்தி செய்யும் நாற்றங்கால் அமைக்கப்பட்டுள்ளதையும், வீட்டுக் கழிவுகளை தரம்பிரித்து, மண்புழு உரம் தயாரிக்கும் கொட்டகையையும், வடுகம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் தலா ரூ. 3.50 லட்சம் வீதம் ரூ. 7 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் அவா் பாா்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
இந்த ஆய்வுகளின்போது மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.