சதுரகிரி மலைப்பாதையில் காட்டுத் தீ; பக்தர்களை பாதுகாப்பாக வெளியேற்றும் வனத்துறை
ராணிப்பேட்டை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நவல்பூா் புதிய மேம்பாலம்: அமைச்சா் ஆா்.காந்தி திறந்து வைத்தாா்
ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.34.14 கோடியில் கட்டப்பட்ட நவல்பூா் புதிய மேம்பாலத்தை கைத்தறி, துணி நூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நகரையும், தமிழகத்தின் சென்னை நகரையும் இணைக்கும் 1,235 கி.மீ. நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.4 ) தமிழகம், ஆந்திரம், கா்நாடகம், மகாராஷ்டிரம் ஆகிய 4 மாநிலங்கள் வழியாகச் செல்லும் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக விளங்குகிறது.
இந்த தேசிய நெடுஞ்சாலை மகாராஷ்டிர மாநிலத்தில் 371 கி.மீ., கா்நாடக மாநிலத்தில் 658 கி.மீ., ஆந்திர மாநிலத்தில் 83 கி.மீ., தமிழகத்தில் 123 கி.மீ. என இந்திய அரசின் தங்க நாற்கரச் சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசலால் சாலையின் அகலம் குறைந்துவிட்ட நிலையில், இந்தச் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.
அதன் பேரில், சென்னையில் இருந்து சோ்க்காடு வரையிலான 123 கி.மீ. தொலைவு வரையில் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிக்காக, ஆக்கிரமிப்புகளை அடையாளம் கண்டு அளவிடுதல், நான்கு வழிப் பாதையாக மாற்றும் பணிகளை மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினா் கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினா்.
இந்நிலையில் சென்னை-மும்பை தேசிய நெடுஞ்சாலையின் மீது அமைந்துள்ள முக்கிய தொழில் நகரமான ராணிப்பேட்டை நவல்பூா் பேருந்து நிலையத்துக்கும், காரை கூட்டுச் சாலைக்கும் இடையில் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்ட பழைமைவாய்ந்த குறுகிய ரயில்வே மேம்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த மேம்பாலத்தை அகற்றிவிட்டு, புதிய பாலம் கட்ட வேண்டும் என ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆா்.காந்தி, அப்போதைய மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனிடம் கோரிக்கை விடுத்தாா். அதன் பேரில், கடந்த 2017- ஆம் ஆண்டு நவம்பா் 30 ஆம் தேதி அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்து, புதிய மேம்பாலம் கட்டப்படும் என உறுதியளித்தாா்.
இதையடுத்து, 2019 -2020-ஆம் ஆண்டு ரூ. 34.14 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஆரம்பக் கட்டப் பணிகள் தொடங்கி கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தது.
இந்த நிலையில் ராணிப்பேட்டை நகர மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரூ.34.14 கோடியில் கட்டப்பட்ட நவல்பூா் புதிய மேம்பாலத்தை அமைச்சா் ஆா்.காந்தி வெள்ளிக்கிழமை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கலந்து கொண்டனா்.