ராமநவமி தோன்றிய புராண வரலாறு: ஸ்ரீராமநவமி விரதம் - நினைவில் கொள்ள வேண்டியவை
'கலியுகத்தில் கடுமையான விரதங்களோ பூஜைகளோ செய்துதான் புண்ணியபலன்களை அடையவேண்டும் என்பது அவசியமில்லை. அன்புடன் பகவானின் திருநாமத்தினைச் சிந்தித்தாலே போதும்' என்பது எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவாக்கு. அத்தகு நாமஜெபத்தில் மிகவும் உயர்ந்தது ஸ்ரீராமநாம ஜெபம்.

ஸ்ரீராமபிரான் சித்திரை சுக்லபட்ச நவமியன்று புனர்பூச நட்சத்திரம் நான்காவது பாதத்தில் அவதரித்தவர். இதையொட்டி ஸ்ரீராமநவமி எனப்படும் ஸ்ரீராமஜென்மோத்சவமானது நமது தேசம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ராமநவமி - தோன்றிய புராணவரலாறு..!
பொதுவாக ஒரு மாதத்திற்கு இரண்டு பட்சங்கள். ஒரு பட்சம் என்பது பதினைந்து திதிகளைக் கொண்டது என்பது அனைவரும் அறிந்ததே. இவற்றுள் ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு கடவுளுக்கு உகந்ததாகப் போற்றப்படுகின்றன அல்லவா..?! அதேபோல் இன்னின்ன காரியங்களுக்கு இன்னின்ன திதிகள் உரியவை என்ற சிறப்புடன் எல்லா திதிகளும் மகிழ்ந்திருந்தன. ஆனால் சுபகாரியங்களுக்கு ஆகாத திதிகள் என அஷ்டமி மற்றும் நவமி ஆகிய இரண்டையும் மக்கள் ஒதுக்குவதை நினைத்து கண்ணீர் விட்ட அத்திதி தேவதைகள் திருமாலிடம் சென்று தங்கள் மனக்கேதத்தினைச் சொல்லி முறையிட்டனவாம்.
அதற்கு பகவானும், "கவலைப்படாதீர்கள், உங்கள் இருவரையும் மக்கள் கொண்டாடுமாறு செய்கிறேன்" என்று சமாதானம் செய்தருளினாராம்.
அதன்படி, இராம அவதாரத்தினை நவமியிலும்; கிருஷ்ண அவதாரத்தினை அஷ்டமியிலும் நிகழ்த்தி தாம் சொன்ன வாக்கினை நிறைவேற்றினாராம்.
இதனாலேயே ஸ்ரீ ராமநவமி மற்றும் ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி ஆகிய இரண்டையும் மக்கள் சிறப்பாகப் பூஜிக்கின்றார்கள் என்கின்றன புராண நூல்கள்.

ராமநவமி - விரதமிருந்தால் இவ்வளவு பலன்களா..?
ஒரு சமயம் கேசவ பட்டர் என்கிற ஏழை அந்தணர் தேசயாத்திரை புறப்பட்டார். செல்கிற வழியில் வியாசர், பராசரர், சுகி ஆகிய மூன்று தவ முனிவர்களைக் கண்டு வணங்கியவர் தன் ஏழ்மை நிலையினைச் சொல்லி வருத்தத்துடன் முறையிட்டார்.
அவர்களோ ஸ்ரீ ராமநவமி விரதத்தினை முறையாக உபதேசித்ததுடன் ராமாயண உபன்யாசம் செய்வதாலும் கேட்பதாலும் கிடைக்கிற அளப்பரிய பலன்களையும் சொன்னார்கள். இப்படியாக இராம நவமி விரதத்தினை முறையாக மேற்கொண்டால் திருமகள் கடாட்சம் கிடைக்கும்; பகைவர்கள் கூட நண்பர்களாக மாறி விடுவர்; வியாதிகள் தொலையும்; இழந்தவற்றை மீண்டும் அடையலாம்; உத்தமமான குழந்தைகள் மூலம் சந்ததி விருத்தி உண்டாகும் என்கிற பலன்களை மூன்று முனிபுங்கவர்கள் மூலமாகவும் அறிந்த கேசவபட்டர் அவர்களை மகிழ்வுடன் வணங்கி சொந்த ஊர் திரும்பினார். இராமநவமி விரதமகிமையால் சகல ஐஸ்வர்யங்களையும் அடைந்த அவர் பலருக்கும் இவ்விரத மகிமையை உபதேசித்தார். இதன் பலனாக அவரின் மகனான நாராயணன் பட்டத்து யானை மாலையைப் போட்டதன் மூலம் அந்நாட்டிற்கே அரசன் ஆனான். அந்தாடே சுபிட்சமாக விளங்கியது.
விரதங்களில் எளிமையானது இது மட்டும்தான்..!
நமது சமயவியல் வாழ்வில் ஏராளமான விரதபூஜைகள் நம்மால் கடைப்பிடிக்கப் படுகின்றன. ஆனால் மிக எளிமையானதும்; அதேசமயத்தில் உயர்ந்த பலன்களைத் தரவல்லதுமான விரதம் ஸ்ரீராமநவமி ஒன்றே..!
ஸ்ரீ ராமபிரான் அவதரித்தது நல்ல கோடைக் காலம். குருகுல வாசத்தின்போதும்; வனவாசத்தின் போதும் வெயிலில் பாதுகைகள் இன்றி நடந்தவர் அப்பெருமான். தவிர இராமர் பிறந்த அன்று அவரது தந்தையான தசரதச் சக்கரவர்த்தி அயோத்தி முழுவதும் பானகம் மற்றும் நீர்மோருடன் விசிறியும் அளித்து தமது மகிழ்ச்சியைக் கொண்டாடினாராம். இதனாலேயே ஸ்ரீராமநவமியன்று எலுமிச்சை மற்றும் வெல்லம் சேர்த்த பானகமும்; தாளித்த நீர்மோரும் நிவேதிக்கப்படுதல் மரபாக உள்ளது.

ஸ்ரீராமநவமி விரதம் - நினைவில் கொள்ள வேண்டியவை..!
சித்திரை மாதத்தில் முதல் திதியான பிரதமை துவங்கி நவமி வரை ஒன்பது தினங்கள் விரதம் நோற்று ராமாயணத்தினை பாராயணம் செய்வது ஒரு முறை. இதில் பத்தாவது நாளாகிய தசமி திதியன்று இராமர் பட்டாபிஷேக படலத்தினைப் பக்தியுடன் வாசித்து பூர்த்தி செய்வது வழக்கம்.
ஸ்ரீஇராமநவமி அன்றைய ஒரு தினம் மட்டும் விரதமிருந்து பூஜை செய்வது பெரும்பாலானோர் வழக்கம்.
ஸ்ரீராமர் பட்டாபிஷேக படத்தினையோ அல்லது விக்கிரகங்களையோ அலங்கரித்து
அர்ச்சிக்கலாம். அல்லது ஸ்ரீராமாயணம் புத்தகத்தினை வைத்தும் பூஜிக்கலாம்.
மனைப்பலகையில் கோலமிட்டு ஸ்ரீ ராமஜெயம் என்று அரிசிமாவினால் எழுதி, அதற்கு சந்தன குங்கமத் திலகமிட்டு, பூக்கள் தூவி வழிபடுவது வழக்கம்.
ராமநாமத்தினைச் சொல்லி தாமரை மலர்களால் பூஜிப்பது அதிக விசேஷம்.
எளிமையான துளசிதளங்களைக் கொண்டு அர்ச்சிப்பதும் சிறப்பு.
இராமர் ஜனித்தது நடுப்பகலில் என்பதால் இப்பூஜையினை பகல்நேரத்தில் செய்வதுதான் சம்பிரதாயம்.
அன்னம், பாயசம், வடைபருப்பு, கனிவகைகள், தேங்காய், வெற்றிலை முதலியவற்றுடன் இயன்ற நிவேதனங்களை சமர்ப்பிப்பது வழக்கம். முக்கியமாக பானகமும்; நீர்மோரும் இடம்பெறுதல் அவசியம்.
பானகம் மற்றும் நீர்மோர் இவற்றை பூஜை முடிந்தபின் பிரசாதமாக அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும்.
குடை, விசிறி அல்லது செருப்பு போன்றவைகளில் இயன்றவற்றை தானம் செய்வது விசேஷம்.

அன்றைய தினம் முழுமையும் ஸ்ரீராமநாமத்தினைச் சிந்தித்தபடியே இருத்தல் அவசியம்.
அரண்மனை சுகபோகத்தில் பிறந்தாலும் எளிவந்த பிரானாக அவதானித்துக் காட்டியவர் ராமபிரான். அப்பெருமானின் நாமத்தினை சிந்தித்து அதே எளிமையான நற்குணங்களுடன் வாழ நாமும் பிரார்த்திக்கலாமே..!