ராமநாதபுரம்: கணவனிடம் காட்டிக்கொடுத்த கூலிப்படை... கொலை முயற்சியில் சிக்கிய மனைவி!
ராமநாதபுரம் மாவட்டம், ரெகுநாதபுரம் அருகே உள்ள தெற்கு கும்பரத்தை சேர்ந்தவர் லட்சுமணன். சென்ட்ரிங் காண்ட்ராக்டராக பணிபுரியும் இவருக்கு கோட்டை ஈஸ்வரி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் கோட்டை ஈஸ்வரி உச்சிப்புளி பகுதியில் உள்ள இறால் பண்ணை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அங்கு ஒடிசா மாநிலம், சோனாப்பூரை சேர்ந்த சக்திகுமார் பிஜி என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
வேலைக்கு சென்ற இடத்தில் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இந்த பழக்கம் முறையற்ற தொடர்பாக மாறியது. சக்திகுமார் - கோட்டை ஈஸ்வரி இடையிலான பழக்கம் லெட்சுமணனுக்கு தெரியவந்தது. இதையடுத்து கோட்டை ஈஸ்வரியை லெட்சுமணன் கண்டித்துள்ளார். இதனால் முறையற்ற தொடர்பிற்கு தடையாக இருந்த லெட்சுமணனை கொலை செய்ய சக்திகுமார் மூலம் திட்டமிட்டுள்ளார் கோட்டை ஈஸ்வரி. இதையடுத்து தொண்டி கூலிப்படையை சேர்ந்த் கெளதமிடம் நகை மற்றும் பணத்தினை கொடுத்து தனது கணவனை கொலை செய்ய கூறியுள்ளார்.
கோட்டை ஈஸ்வரியிடம் இருந்து பணம் வாங்கிய கெளதம், லெட்சுமணனை தொடர்பு கொண்டு, ''உங்க மனைவி கோட்டை ஈஸ்வரி உங்களை கொலை செய்ய பணம் கொடுத்துள்ளார். என்ன இருந்தாலும் நாம் இருவரும் ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள். எனவே உங்க மனைவி கொடுத்த பணத்தை விட கூடுதலாக நீங்கள் பணம் தந்தால் உங்க மனைவியின் கள்ள காதலனை தீர்த்துக் கட்டிவிடுகிறேன்'' என கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சிக்குள்ளான லெட்சுமணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் புகார் கொடுத்தார். புகாரை தொடர்ந்து விசாரணையில் இறங்கிய தேவிபட்டினம் போலீஸார் லெட்சுமணனின் மனைவி கோட்டை ஈஸ்வரி, கூலிப்படையை சேர்ந்த கெளதம், பிரதீபன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாகிய சக்திகுமார் பிஜியை தேடி வருகின்றனர். முறையற்ற காதலுக்காக கணவனையே மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயன்ற சம்பவம் ராமநாதபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.