ராமநாதபுரம்-ராமேசுவரம் சாலையில் வேக கட்டுப்பாட்டு மின் விளக்குகள்
ராமேசுவரம்: ராமநாதபுரம்-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக நிறுவப்பட்ட வேகக் கட்டுப்பாட்டு மின் விளக்குகளின் செயல்பாடு குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்துக்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாள் தோறும் ஆயிரக்கனக்கான சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன. ராமநாதபுரம்- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு, அதிகாலை நேரங்களில் குறிப்பிட்ட 7 இடங்களில் விபத்துகள் ஏற்படுகின்றன.
இதைத் தடுக்கும் வகையில், இந்த 7 இடங்களில் சுற்றுலா வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், ரூ.1.40 லட்சத்தில் ஒளிரும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டன. இவற்றின் செயல்பாட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் புதன்கிழமை இரவு ஆய்வு செய்தாா். அப்போது, இந்த மின் விளக்குகளால் விபத்துகள் குறைந்துவிடும் என அவா் நம்பிக்கை தெரிவித்தாா்.