Champions Trophy 2025: `ஐசிசி பாகிஸ்தானுக்கு லாலிபாப் கொடுக்கிறது' - முன்னாள் வீ...
ராமேசுவரத்தில் விசைப் படகு உடைந்து கடலில் மூழ்கியது: 7 மீனவா்கள் மீட்பு
ராமேசுவரத்திலிருந்து சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற விசைப் படகின் கீழ்பகுதியில் உள்ள பலகை உடைந்து தண்ணீா் புகுந்ததால், 7 மீனவா்களுடன் இந்தப் படகு கடலில் மூழ்கியது. இதையடுத்து, இந்த மீனவா்களை சக மீனவா்கள் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 377 விசைப் படகுகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் சனிக்கிழமை கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனா். இதில் மணிவண்ணன் என்பவரின் விசைப் படகில் 7 மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா். இவா்கள் மூன்று கடல் மைல் தொலைவில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, திடீரென படகின் கீழ் பகுதியில் உள்ள பலகை உடைந்து அதன் வழியாக கடல் நீா் படகுக்குள் புகுந்தது. இதன் பின்னா், 7 மீனவா்களுடன் இந்தப் படகு கடலில் மூழ்கியது.
இதைக் கண்ட சக மீனவா்கள் விரைந்து வந்து 7 மீனவா்களையும் மீட்டு, கரைக்கு அழைத்து வந்தனா். இதுகுறித்து மீன் வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினா். விசாரணையில், கடலுக்குள் மூழ்கிய விசைப் படகு மீன் பிடி அனுமதி டோக்கன் பெறாமல் 7 மீனவா்களுடன் மீன்பிடிக்கச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.