ரியான் ரிக்கல்டான் சதம், மூவர் அரைசதம்; ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு!
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் குவித்துள்ளது.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் கராச்சியில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: மீண்டும் இந்திய அணியின் சீருடையில் சச்சின் டெண்டுல்கர், யுவராஜ் சிங்!
சதம் விளாசிய ரியான் ரிக்கல்டான்
தென்னாப்பிரிக்க அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டான் மற்றும் டோனி டி ஸார்ஸி களமிறங்கினர். டோனி டி ஸார்ஸி 11 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து, ரியான் ரிக்கல்டான் மற்றும் கேப்டன் டெம்பா பவுமா ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடியது. நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் டெம்பா பவுமா அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 76 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 5 பவுண்டரிகள் அடங்கும்.
தொடக்கம் முதலே சீரான இடைவெளிகளில் பவுண்டரிகள் அடித்து விளையாடிய ரியான் ரிக்கல்டால்ன் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 பந்துகளில் 103 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.
இதையும் படிக்க: விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில்!
315 ரன்கள் குவிப்பு
கேப்டன் டெம்பா பவுமா அரைசதமும், ரியான் ரிக்கல்டான் சதமும் எடுத்து ஆட்டமிழக்க, ராஸி வாண்டர் துசென் மற்றும் அய்டன் மார்க்ரம் இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய ராஸி வாண்டர் துசென் 46 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடி காட்டிய அய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 52 ரன்கள் (6 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர்) எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 315 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஃபஸல்ஹக் ஃபரூக்கி, அஸ்மதுல்லா ஓமர்சாய் மற்றும் நூர் அகமது தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: முகமது ஷமிக்கு ரிக்கி பாண்டிங் புகழாரம்!
316 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்குகிறது.