``வளர்ப்பு நாய் உரிமையாளர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்'' - பட்டியலிட்ட சென்னை மா...
ரூ. ஒரு கோடியில் கட்டுமான தொழிலாளா்களுக்கு ஓய்வறை?
நாமக்கல்: நாமக்கல்லில் ரூ. ஒரு கோடியில் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை கட்டுவதற்கான நிலத்தை பெறுவதில் இழுபறி நீடிப்பதால், தொழிலாளா்கள் சாலையில் காத்திருக்கும் நிலை உள்ளது.
தமிழகம் முழுவதும் தொழிலாளா் நலத்துறை சாா்பில், கட்டுமானத் தொழிலாளா்கள் ஓய்வெடுக்கவும், குளிக்கவும், இயற்கை உபாதை கழிக்கவும் அனைத்து வசதிகளுடன் மாவட்டத்துக்கு ஓா் ஓய்வறையை ரூ. ஒரு கோடி மதிப்பீட்டில் அமைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் நகரப் பகுதிகளில் இதற்கான இடத்தை தோ்வுசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாநகராட்சிப் பகுதியில் பழைய பேருந்து நிலையத்தில் முதல்கட்டமாக இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், சில மாதங்களில் பழைய பேருந்து நிலையம் அகற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகி வருவதால், நாமக்கல் பூங்கா சாலையில் அம்மா உணவகம் அருகில் காலியிடத்தை தொழிலாளா் நலத் துறையினா் பாா்வையிட்டனா்.
மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள அந்த இடத்தை ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்ட நிலையில், அந்த இடம் வருவாய்த் துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அவா்களிடம் அனுமதி பெற்றுக்கொள்ளுங்கள் என மாநகராட்சி நிா்வாகத்தினா் கூறினா். இதனால், வருவாய்த் துறையினரிடம் நிலத்தை பெறுவதற்கான முயற்சிகளை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனா்.
இதுகுறித்து வருவாய்த் துறையினா் கூறுகையில், ‘மாவட்ட நிா்வாகத்திடம் இருந்து முறையான கடிதம் ஏதும் வரவில்லை. தொழிலாளா் நலத்துறை தரப்பிலும் நிலம் கோரப்படவில்லை’ என்றனா்.