ரூ. 12 கோடி உயா் ரக கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
சென்னை விமான நிலையத்தில் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.12 கோடி மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனா்.
தாய்லாந்து நாட்டின் தலைநகா் பாங்காக்கிலிருந்து, தாய் ஏா்லைன்ஸ் விமானம் வியாழக்கிழமை அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில், வந்த பயணிகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையிட்டபோது, சந்தேகத்தின் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த 30 வயது இளைஞா், தமிழகத்தைச் சோ்ந்த 33 வயது இளைஞா் ஆகிய இருவரிடம் மோப்பநாய்களின் உதவியுடன் சோதனையிட்டனா்.
அப்போது, இருவரின் பையையும் சோதனையிட்டதில், பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்ரக கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவா்களிடம் இருந்து ரூ. 12 கோடி மதிப்பிலான 12 கிலோ உயர்ரக கஞ்சாவை அதிகாரிகள் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.