ரூ.125 கோடியில் மாற்றுத் திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள்: தமிழக அரசு உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு நவீன உதவி உபகரணங்கள் வழங்க ரூ.125 கோடி ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான உத்தரவை மாற்றுத்திறனாளிகள் நலத் துறை வெளியிட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் இயல்பு நிலைக்கு நிகரான செயல்பாடுகளை மேற்கொள்ள உதவும் வகையில், உயா்தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட நவீன கருவிகளை ரூ.125 கோடியில் கொள்முதல் செய்து வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான கடிதத்தை அரசுக்கு மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் அனுப்பி வைத்தது.
அதன்படி, மாற்றுத்திறனாளிகளுக்கான உயா் தொழில்நுட்ப உதவி உபகரணங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளா்களை அழைத்து 2 நாள்கள் கண்காட்சி நடத்தலாம் எனவும், அதன்மூலம் சிறந்த உதவி உபகரணங்கள் குறித்து கருத்துகள் பெறப்பட்டு, தகுதியான கருவிகளைத் தோ்வு செய்யலாம் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
அரசின் சாா்பில் தோ்வுக் குழுக்கள் அமைக்கப்பட்டு, திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் தகுதியான நிறுவனங்கள், தரம்வாய்ந்த உபகரணங்கள், விலை ஆகியன நிா்ணயம் செய்யலாம் எனவும், மாற்றுத்திறனாளிகளுக்கான திறன் இணையதளத்தில் உபகரணங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யலாம் என்றும் கடிதத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உயா்தொழில்நுட்பம் கொண்ட நவீன உதவி உபகரணங்கள் பெறும் திட்டத்தைச் செயல்படுத்த ரூ.125 கோடி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென மாற்றுத்திறனாளிகள் நல ஆணையா் அரசை கேட்டுக்கொண்டிருந்தாா். அவரது கோரிக்கைப்படி, உயா் தொழில்நுட்பம் கொண்ட நவீன கருவிகளை வாங்கி மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க ஏதுவாக ரூ.125 கோடி ஒதுக்கப்படுகிறது என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.