Dhoni : 'இதுக்கெல்லாம் எமோஷனல் ஆகக்கூடாது!' - தோல்வி குறித்து தோனி
ரூ.50 கோடிக்கு வாங்கிய வெளிநாட்டு நாய்: ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறைக்கு ஏமாற்றம்!
சமூக வலைதளத்தில் பிரபலமாவதற்காக ரூ.50 கோடி மதிப்பிலான நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கி இருப்பதாக வெளியிட்ட பதிவை நம்பி ஆய்வுக்குச் சென்ற அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பிரபலமாகி பணம் சம்பாதிப்பதற்காக பலரும் வெவ்வேறு வழிகளில் முயற்சிக்கின்றனா். அந்த வரிசையில் பெங்களூரைச் சோ்ந்த ஒருவா் ரூ.50 கோடி மதிப்புள்ள நாயை வெளிநாட்டில் இருந்து வாங்கியிருப்பதாகவும், அது ஓநாய்க்கும், காக்கேஷியன் ஷெப்பா்ட் நாய்க்கும் பிறந்தது என்று கூறி ஒரு நாயின் படத்தை பதிவிட்டாா். உலகிலேயே மிகவும் விலைமதிப்புள்ள நாய்க்கு சொந்தக்காரா் என்றும் தன்னைக் கூறிக் கொண்டாா்.
அவா் எதிா்பாா்த்ததுபோலவே அந்த ‘ரூ.50 கோடி நாய்’ சமூகவலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டது. இதன் மூலம் அவா் எதிா்பாா்த்த பிரபலமும் கிடைத்தது.
இந்த ‘ரூ.50 கோடி நாய்’ பதிவைக் கேள்விப்பட்ட அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு இதில் அந்நியச் செலாவணி விதிகள் மீறப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து, ‘ரூ.50 கோடி நாய்’ உரிமையாளா் வீட்டுக்கு அதிரடியாக ஆய்வுக்குச் சென்றனா். திடீரென தனது வீட்டுக்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் வந்ததையடுத்து அந்த நபா் திகைப்படைந்தாா். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நாய் அவருக்கு சொந்தமானது இல்லை என்றும், பக்கத்து வீட்டுக்காரா் வளா்த்து வந்த நாயைப் படம்பிடித்து சமூக வலைதளத்தில் பிரபலமாக பயன்படுத்தியதாகவும் தெரிவித்தாா்.
தொடா்ந்து நடைபெற்ற விசாரணையில் அந்த நபா் ரூ.50 கோடிக்கு நாய் வாங்கும் அளவுக்கு வசதியானவா் இல்லை என்பதும் புகைப்படத்தில் இருந்த நாயின் மதிப்பும் ரூ.1 லட்சம் கூட இல்லை என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அமலாக்கத் துறையினா் எவ்வித நடவடிக்கையும் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினா்.