சீன மாஸ்டர்ஸ் சூப்பர் 750 பாட்மின்டன்: சாம்பியன் பட்டத்தை நழுவவிட்ட இந்தியா!
ரோபோ சங்கர் மறைவு: உருக்கமாக பதிவிட்ட மகள் இந்திரஜா!
நடிகா் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த வியாழக்கிழமை காலமான நிலையில், அவரது மகளும் நடிகையுமான இந்திரஜா சங்கர் தனது தந்தை குறித்து உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
சின்ன திரை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான ரோபோ சங்கர், மாரி, புலி, வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்ட ரோபோ சங்கர், சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
இதனிடையே, சென்னையில் நடைபெற்ற படப்பிடிப்பில் பங்கேற்று வந்த நிலையில், கடந்த புதன்கிழமை காலை படப்பிடிப்பு தளத்தில் ரோபோ சங்கர் திடீரென மயக்கமடைந்தார். அவருக்கு நீர்ச்சத்து குறைபாடு, குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அவர் சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (செப். 18 ) இரவு அவர் உயிரிழந்தார்.
தன்னுடைய தந்தையின் இழப்பைத் தாங்க முடியாமல் நடிகை இந்திரஜா சங்கர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவருடைய பதிவில், ”நீங்கள் இல்லாமல் 3 நாள்கள் ஆகிவிட்டது. எங்களை அதிகமாக சிரிக்க வெச்சதும் நீங்கள்தான், இப்போது அதிகமாக அழ வைப்பதும் நீங்கள்தான்.
இந்த 3 நாள்கள் எனக்கு உலகமே தெரியவில்லை, நீங்கள் இல்லாமல் குடும்பத்தை, நாங்கள் எப்படி கொண்டு செல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை.
ஆனால் நீங்கள் எனக்கு சொல்லிக் கொடுத்ததுபோலக் கண்டிப்பாக நான் பலமாக இருப்பேன். விமர்சனங்களுக்கு பயப்பட மாட்டேன் பா. உங்களை பெருமைப்படுத்துவேன் பா” என்று பதிவிட்டுள்ளார்.
இந்திரஜாவின் பதிவுக்கு, அவருடைய ரசிகர்கள், நண்பர்கள் என பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தாதா சாகேப் பால்கே விருது! ரசிகர்கள், குடும்பத்தினருக்கு மோகன்லால் நன்றி!