ரோஹித் சர்மா மிகப் பெரிய பங்களிப்பை வழங்குவார்: டிரெண்ட் போல்ட்
ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் என மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப் பந்துவீச்சாளர் டிரெண்ட் போல்ட் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெற்ற நேற்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிக்க: அதிக விக்கெட்டுகள்: மலிங்காவின் சாதனையை சமன்செய்த பும்ரா!
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை இந்தியன்ஸ் அணி வெறும் 15.4 ஓவர்களில் எட்டி அசத்தியது. அந்த அணியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் சர்மா 46 பந்துகளில் 70 ரன்கள் (8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள்) எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
உலகத் தரத்திலான வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு பேசிய டிரெண்ட் போல்ட், ரோஹித் சர்மா உலகத் தரத்திலான வீரர் எனவும், மும்பை அணிக்காக அவர் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது: மும்பை இந்தியன்ஸ் அணியில் உள்ள அனைவருமே உலகத் தரத்திலான வீரர்கள் என நினைக்கிறேன். அதிலும் குறிப்பாக, ரோஹித் சர்மா போன்ற வீரருக்கு எந்த ஒரு அறிமுகமும் தேவையில்லை. அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பங்களிப்பை வழங்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்பதை என்னால் உறுதியாக கூற முடியும். ஆனால், ரோஹித் சர்மா சரியான நேரத்தில் அணிக்கு அவரது பங்களிப்பை வழங்கி வருகிறார். மீதமுள்ள போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கவுள்ளார் என்றார்.
இதையும் படிக்க: சின்னசாமி திடலில் ரஜத் படிதாருக்கு காத்திருக்கும் சவால்: ஜிதேஷ் சர்மா
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் மும்பை அணியின் நெட் ரன் ரேட் உயர்ந்ததுடன், புள்ளிப்பட்டியலிலும் 3-வது இடத்துக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது.