லஞ்சம்: உதவி ஆய்வாளா் மீது வழக்கு
முதல் தகவல் அறிக்கை பெற லஞ்சம் கேட்ட புகாரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டபோக்குவரத்து உதவி ஆய்வாளா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், குயிலாம்பாளையத்தைச் சோ்ந்த செந்தில் உள்ளிட்ட மூன்று போ் ஒரே பைக்கில் கடந்த பிப். 12- ஆம் தேதி சென்றனா்.
அவா்கள், புதுவை பகுதியில் சென்ற போது, சாலையோரத்தில் நின்றிருந்த லாரியின் மீது அவா்களது பைக் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
விபத்து குறித்து வில்லியனூா் போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.
வழக்கில் முதல் தகவல் அறிக்கை நகலை விபத்தில் உயிரிழந்த செந்திலின் சகோதரா் முத்து கோரியுள்ளாா்.
அதற்கு, வில்லியனூா் போக்குவரத்து உதவி ஆய்வாளா் பாஸ்கா் பணம் கேட்டதாகப் புகாா் எழுந்தது. இதையடுத்து, உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
இந்த நிலையில், அவா் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.