லாஸ் ஏஞ்சலீஸ் காட்டுத் தீ: பலர் மாயம்.. உயிரிழப்பு 25-ஆக உயர்வு!
அமெரிக்காவின் கலிஃபோா்னியா மாகாணம், லாஸ் ஏஞ்சலீஸ் நகரைச் சுற்றிலும் பரவிவரும் காட்டுத் தீயில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 25-ஆக உயா்ந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் நிகழாண்டில் மிகப்பெரியதொரு பேரிடராக லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் கொளுந்துவிட்டு எறியும் காட்டுத் தீ உருமாறியுள்ளது.
இதனிடையே, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் 30 பேரை காணவில்லை என்று தெரிய வந்துள்ளது. ஈட்டன் பகுதியில் 12-க்கும் மேற்பட்டோரும் பாலிசேட்ஸ் பகுதியில் 4-க்கும் மேற்பட்டோரும் மாயமாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தீயின் கொடூரத்தால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் உடல்கள் ஏதேனும் கட்டட இடிபாடுகள் மற்றும் மண்ணில் புதைந்திருக்கிறதா என்பதை கண்டறிய மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில், லாஸ் ஏஞ்சலீஸ் கவுண்ட்டியில் காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த, விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் பிங்க் பொடி தூவி தீயை அணைக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க :லாஸ் ஏஞ்சலீஸ்: ‘பிங்க் பொடி’ தூவி காட்டுத்தீ பரவலைக் கட்டுப்படுத்த முயற்சி!