வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவரின் பெயர் சூட்டப்படும்! முதல்வர் அறிவிப்பு!
மத்தியப் பிரதேசத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் கட்டடத்துக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.
அம்மாநில சிறுபான்மை துறையின் சார்பில் வக்ஃப் திருத்தம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி தலைநகர் போபாலில் இன்று (மே.6) நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்துக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய முதல்வர் மோகன் யாதவ், மத்தியப் பிரதேசத்தில் கட்டடப்பட்டுள்ள வக்ஃப் வாரியத்தின் புதிய கட்டடத்துக்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் பெயர் சூட்டப்படும் என அறிவித்துள்ளார்.
மேலும், அந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர்கள் ம.பி.யின் வக்ஃப் வாரியத்தின் திருத்தம் குறித்த தங்களது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இதுகுறித்து முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது:
”வக்ஃப் வாரியத்தின் திருத்தம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பிரதிநிதிகளுடன் அர்த்தமுள்ள கலந்துரையாடல் நடைபெற்றது. நாம் அனைவரும் பொது நலனையும் தீர்மானங்களையும் உணர்ந்து, பின்தங்கியப் பிரிவினருக்கு உதவ வேண்டும். இந்த புனிதமான குறிக்கோளில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.” என அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது முதல் மத்தியப் பிரதச அரசு அம்மாநிலத்திலுள்ள வக்ஃப் சொத்துக்களை சரிப்பார்க்கத் துவங்கியுள்ளது.
ம.பி. மாநிலம் முழுவதும் சுமார் 23,118 சொத்துக்கள் வக்ஃப் வாரியத்துக்கு சொந்தமானது எனவும் அதில் வீடுகள், கடைகள், நிலங்கள் மற்றும் கட்டடங்கள் என சுமார் 14,989 சொத்துக்களின் மீது தற்போது கவனம் செலுத்தப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:விமானத்தில் தீ! தில்லியில் அவசரமாக தரையிறக்கம்: 425 பயணிகள் உயிர் தப்பினர்!