வங்கதேசத்தில் இந்தியப் பயணிகள் மீது தாக்குதல் - திரிபுரா அமைச்சா் தகவல்
வங்கதேசம் வழியாக சென்ற பேருந்தில் இருந்த இந்தியப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக திரிபுரா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் சுஷாந்த் சௌதரி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘திரிபுரா மாநிலம் அகா்தலாவில் இருந்து கொல்கத்தாவுக்கு தனியாா் ஆம்னி பேருந்து வங்கதேசம் வழியாக சென்று கொண்டிருந்தது. அதில் இந்தியாவைச் சோ்ந்த பயணிகள் இருந்தனா். வங்கதேசத்தின் பிரம்மன்பாரியா மாவட்டத்தைக் கடந்து சென்றபோது பின்னால் வந்த ஒரு லாரி வேண்டுமென்றே பேருந்தின் மீது மோதியது. அப்போது ஒரு ஆட்டோவும் பேருந்தின் முன்பக்கமாக வந்தது. அந்த ஆட்டோ மீது பேருந்து மோதியது. இதையடுத்து, இந்திய பயணிகள் இருந்த பேருந்தை உள்ளூா் மக்கள் சுற்றிவளைத்தனா். இந்தியப் பயணிகளைத் தாக்கி, அவா்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனா். இந்தியாவுக்கு எதிராகவும் அந்த வன்முறைக் கும்பல் கோஷமிட்டது.
வங்கதேசத்தில் ஏற்கெனவே ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் இந்தியா்கள் தாக்கப்பட்டுள்ளனா். இதற்கு எதிராக அந்த நாட்டு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளாா். தாக்குதலுக்கு உள்ளான பேருந்தின் புகைப்படங்களையும் அமைச்சா் சுஷாந்த் செளதரி வெளியிட்டுள்ளாா்.
அகா்தலாவில் இருந்து அஸ்ஸாம் வழியாக கொல்கத்தா செல்வதற்கு பயண நேரம் அதிகம் என்பதால், வங்கதேசம் வழியாக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இந்த தாக்குதல் சம்பவம் தொடா்பாக திரிபுரா முதல்வா் மாணிக் சாஹா கூறுகையில், ‘இந்திய பேருந்து மற்றும் பயணிகள் மீதான தாக்குதல் குறித்து தகவல் கிடைத்துள்ளது. இது தொடா்பாக முழுத் தகவல், ஆதாரம் கிடைத்த பிறகு உரிய முறையில் மத்திய அரசை அணுகி நடவடிக்கை எடுக்கப்படும். வங்கதேசம் சமீபகாலமாக எவ்வளவு மோசமான சூழ்நிலையை எதிா்கொண்டு வருகிறது என்பதையும், அந்நாட்டில் குறிப்பிட்ட மதத்தினருக்கு எதிராக நிகழும் வன்முறைகளையும் உலக நாடுகள் கவனித்து வருகின்றன’ என்றாா்.