Rajini: "லோகேஷ் கனகராஜ் எங்க ஊர் ராஜமௌலி; நானே வில்லனாக நடிக்க ஆசைப்பட்டேன்!'' -...
வங்காள மொழி: `பொருத்தமான பதிலடி கொடுக்காமல் மம்தா பானர்ஜி கடந்து செல்லமாட்டார்' - முதல்வர் ஸ்டாலின்
டெல்லியில் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விசாரிக்க வங்காள மொழிப் பேசும் மொழிப்பெயர்ப்பாளர்கள் வேண்டும் என மேற்கு வங்க அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினர் இல்லமான பங்கா பவனுக்கு டெல்லி காவல்துறை கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியது. அந்தக் கடிதத்தில், வங்காள மொழி பேசும் நபர் என்பதற்கு பதிலாக வங்காளதேச மொழி பேசும் நபர் என எழுதியிருக்கிறது.
மம்தா பானர்ஜி கண்டனம்:
அந்தக் கடிதத்தைக் குறிப்பிட்டு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன் எக்ஸ் பக்கத்தில், ``இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்காளதேச" மொழி என்று விவரிக்கிறது!

ரவீந்திரநாத் தாகூர் மற்றும் சுவாமி விவேகானந்தரின் தாய்மொழியான வங்காள மொழி, நமது தேசிய கீதம் மற்றும் தேசியப் பாடல் (பங்கிம் சந்திர சட்டோபாத்யாய எழுதியது) எழுதப்பட்ட மொழி, கோடிக்கணக்கான இந்தியர்கள் பேசும் மற்றும் எழுதும் மொழி, இந்திய அரசியலமைப்பால் புனிதப்படுத்தப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட மொழி, இப்போது வங்காளதேச மொழி என்று விவரிக்கப்பட்டுள்ளது!!
அவதூறான, அவமதிக்கும், தேச விரோத இந்தக் விவரிப்பு அரசியலமைப்பிற்கே விரோதமானது!! இந்த விவரிப்பு இந்தியாவின் அனைத்து வங்காள மொழி பேசும் மக்களையும் அவமதிக்கும் செயல். நம் அனைவரையும் இழிவுபடுத்தும் இந்த வகையான வார்த்தையை அவர்கள் பயன்படுத்திருக்கக் கூடாது. பயன்படுத்தவும் முடியாது.
வங்காள மொழிக்கு அவமதிப்பு:
இந்தியாவின் வங்காள மொழி பேசும் மக்களை அவமதிக்க இதுபோன்ற அரசியலமைப்பு விரோத வார்த்தைகளைப் பயன்படுத்தும் ஆளும் அரசுக்கு எதிராக, வங்காள மொழி எதிர்ப்புக்கு எதிராக அனைவரும் உடனடியாக வலுவான கண்டனங்களைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ஜ.க பதில்:
மம்தா பானர்ஜியின் கண்டனத்துக்கு பதிலளித்திருக்கும் பா.ஜ.கவின் IT பிரிவு தலைவர் அமித் மால்வியா எக்ஸ் தளத்தில், ``சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான நடவடிக்கையை மம்தா பானர்ஜி எதிர்க்கிறார். மொழி மற்றும் உணர்வுகளை தூண்டி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறார். இது வெட்கக்கேடானது.

மேலும், சட்டவிரோதமாக ஊடுருவும் வங்கதேசத்தவர்கள் மற்றும் ரோஹிங்கியாக்களை சட்டப்படி கண்டிப்பாக கையாளுவோம். இந்தியாவின் இறையாண்மையையும், தேசிய பாதுகாப்பையும் பாதுகாக்க எந்த அரசியல் குறுக்கீடும் இருக்காது. மம்தா பானர்ஜிக்கு இது நன்றாக தெரியும்" எனத் தெரிவித்திருக்கிறார்.
மம்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு:
இந்த நிலையில், மம்தா பானர்ஜியின் கருத்தை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள டெல்லி காவல்துறை, வங்காள மொழியை "வங்காள தேச மொழி" என்று வர்ணித்துள்ளது. இது நமது தேசிய கீதம் எழுதப்பட்ட மொழிக்கே நேரடி அவமானம்.
இதுபோன்ற அறிக்கைகள் தற்செயலான பிழைகளோ, தவறுகளோ அல்ல. தொடர்ந்து பன்முகத்தன்மையை குறைமதிப்பிற்கு உட்படுத்தி, அடையாளத்தையே ஆயுதமாக்கும் ஒரு ஆட்சியின் இருண்ட மனநிலையை இந்த வார்த்தைப் பிரயோகம் அம்பலப்படுத்துகின்றன. இந்தி அல்லாத மொழிகள் மீதான இந்த தாக்குதலை எதிர்கொள்ளும் போது, மம்தா பானர்ஜி அரசும், மம்தா பானர்ஜியும் மேற்கு வங்க மொழிக்கும் மக்களுக்கும் ஒரு கேடயமாக நிற்கிறார். பொருத்தமான பதிலடி கொடுக்காமல் இந்த தாக்குதலை அவர் கடந்து செல்லமாட்டார்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.