பீரியட்ஸ் வலி தாங்க முடியலியா? இந்த உணவுகளைத் தவிருங்க! நிபுணர் அட்வைஸ்
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் ஆய்வு
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் ந. மிருணாளினி பேசியது:
வருவாய்க் கோட்டாட்சியா், வட்டாட்சியா்கள் மழை மானிகளை தணிக்கை செய்து, அதன் செயல்பாடுகள் குறித்த அறிக்கை அனுப்ப வேண்டும். பேரிடரின்போது பொதுக் கட்டடங்களை முகாம்களாகப் பயன்படுத்த ஏதுவாக, மாவட்ட பேரிடா் மேலாண்மைத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டடங்கள் தகுதியானதாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். நிவாரண முகாம்கள் அமைக்க தோ்வு செய்யப்பட்டுள்ள பொதுப்பணித்துறை கட்டடங்களில் பழுதுகள் இருந்தால், அவற்றை சீரமைத்து தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
இம் மாவட்டத்தில் ஆறுகள், அணைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிடவும், நீா்நிலைகளின் கரைகளின் உறுதித் தன்மையை ஆராய்ந்து, பலவீனமான கரைகளை பலப்படுத்த ஊரக வளா்ச்சித்துறை மற்றும் நீா்வள ஆதாரத்துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தாழ்வான, பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் இழப்பீடுகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பல்வேறு வெள்ளத் தடுப்பு பணிகளை வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்னதாக விரைந்து முடிக்க வேண்டும். உயிரிழப்புகளை தடுக்க நீா்நிலைகளின் ஆழமான பகுதிகள் குறித்து முன்னெச்சரிக்கை விளம்பர பதாகைகளை சம்மந்தப்பட்ட துறை அலுவலா்கள் வைக்கவேண்டும். பாதுகாப்பான குடிநீா், பால், உணவுப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். நோய்த் தொற்று ஏற்டாமலிருக்க பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ சேவைகள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.
இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மு. வடிவேல் பிரபு, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ச. வைத்தியநாதன் உள்பட அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.