வடதமிழகத்தில் தீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை!
வடதமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது. தெற்கு கேரளம், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று(டிச.27) முதல் வரும் ஜனவரி 2-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.