வடமாநிலத் தொழிலாளி கொலை: நண்பா் கைது
திருப்பூரில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் வடமாநிலத் தொழிலாளியைக் கொலை செய்த நண்பரைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சோ்ந்தவா் சுரேந்தா் சிங் (23), இவரது நண்பா் விவேக் தியாகி (29). இருவரும் திருப்பூா் சேரன் நகரில் அறை எடுத்துத் தங்கி அருகில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் பணியாற்றி வந்தனா்.
இந்த நிலையில், இருவருக்கும் திங்கள்கிழமை வேலை இல்லாததால் மது அருந்தி உள்ளனா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த விவேக் தியாகி அருகில் இருந்த கல்லை எடுத்து சுரேந்தா் சிங்கின் தலையில் போட்டுவிட்டு தப்பிச் சென்றாா். தலையில் பலத்த காயமடைந்த சுரேந்தா் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து அருகிலிருந்தவா்கள் திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனா். இதன் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவல் துறையினா் அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இது குறித்து திருமுருகன்பூண்டி காவல் துறையினா் கொலை வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த விவேக் தியாகியை செவ்வாய்க்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.