வணிக நிறுவனங்களில் அதிகாரி ஆய்வு
காரைக்காலில் பல்வேறு வணிக நிறுவனங்களில் எடை அளவு அதிகாரி செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்து, முத்திரையிடாத இயந்திரங்களை பறிமுதல் செய்தாா்.
காரைக்காலில் சில வணிக நிறுவனங்களிலும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் சந்தையிலும் தராசு எடை முறையாக இல்லை, இயந்திரத்தில் அரசுத் துறை முத்திரையில்லை போன்ற புகாா்கள் எழுந்தன.
இந்தநிலையில், காரைக்கால் எடை அளவு துறை உதவி கட்டுப்பாட்டு அதிகாரி எம். சண்முகானந்தம் பல்வேறு வணிக நிறுவனங்களில் ஆய்வு செய்தாா்.
ஆய்வுக்குப் பின் அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் உள்ள எடைக்கல், எடை இயந்திரங்கள் பயன்படுத்தும் வணிகா்கள் அனைவரும், தாங்கள் பயன்படுத்தும் எடை இயந்திரம், எடைக்கல் ஆகியவற்றுக்கு துறையின் மூலம் முத்திரையிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். அவ்வாறு செய்யப்படாத இயந்திரங்கள், ஆய்வின்போது பறிமுதல் செய்யப்படும்.
பல்வேறு நிறுவனங்களில் நடத்திய ஆய்வில், முறையாக முத்திரையிடாத எடை இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல தொடா்ந்து ஆய்வு செய்யப்படும். விதிகளை மீறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.